Popular Posts Today

பதிவுகள்

காஸா படுகொலைகளும்-அரபு நாடுகளும்...


இஸ்ரேலின் காஸா கொலைகளை அரபு நாடுகள் வாய் மூடி மெளனமாக வேடிக்கை பார்ப்பதேன்?
 
தங்களது, இனம், மொழி, மார்க்கத்தையே சார்ந்த பாலஸ்தீன மக்களை, அதிலும் குறிப்பாக சின்னஞ்சிறு சிறார்களை கொத்துக்கொத்தாக கொல்லப்படுவதை அரபு நாடுகள் சிறிதும் சஞ்சலமின்றி வேடிக்கைப்பார்த்துக்கொண்டு அசைவற்றிருப்பது உலகமக்களை வியப்பிலாழ்த்தியிருப்பது என்னவோ உண்மை.
ஆம்! அதுவும் தங்களது பரம எதிரி நாடான இஸ்ரேலாலேயே இந்த கொடூரம் நடைபெறுவதை அவைகள் கண்டும் காணாமல், குறைந்த பட்சம் நீலிக்கண்ணீர் கூட வடிக்காமல் இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருந்தாலும் இதற்குப் பின்னால் ஒவ்வொரு அரபு நாட்டின் அப்பட்டமான சுயநலமே காரணம் என்பது பட்டவர்த்தனமான உண்மையாகத் தெரிகிறது.
இஸ்ரேலின் ''கொலைவெறி''யாட்டத்தை அரபு நாடுகள் சொல்லி வைத்தாற் போல அமைதியாக கை கட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டு வருகின்றன. இன்னும் சொல்லப் போனால், ''கொலைவெறி''இஸ்ரேலுக்கு ஆதரவாக அவை ஓரணியில் நிற்கின்றன. காரணம் ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் எவ்வளவோ பரவாயில்லை என்று அரபு நாடுகள் நினைப்பதால்தான் இப்படி அமைதி காப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இப்படியாவது ஹமாஸை ''கொலைவெறி''இஸ்ரேல் அழித்தொழிக்கட்டும் என்று அரபு நாடுகள் நினைப்பதாகவும் கூறப்படுகிறது. நம்மால்தான் ஹமாஸை தட்டி வைக்க முடியாது. இஸ்ரேலாவது அதைச் செய்யட்டும் என்று அரபு நாடுகள் கருதுவதாகத் தெரிகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்தபோது அதற்கு அரபு நாடுகளிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் இம்முறை அப்படி எந்த எதிர்ப்பும் இல்லாமல் போனதால்தான் இஸ்ரேலின் ''கொலைவெறி'' மூர்க்கத்தனம் குதியாட்டம் போடுகிறது..
எகிப்துதான் இந்த இஸ்ரேல் ஆதரவு அரபு நாடுகளின் தலைவர் போல திகழ்கிறது. கடந்த ஆண்டு எகிப்தில் முபாரக்கின் ஆட்சியை கிளர்ச்சியாளர்கள் கவிழ்த்தனர். அவர்களுக்குத் துணையாக ராணுவமும் இருந்தது. இப்போது எகிப்து ராணுவத்தின் வசம்தான் உள்ளது. தற்போது எகிப்து தான் இஸ்ரேலுக்கு முழு ஆதரவாக இருந்து வருகிறது.
அதேபோல ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான் ஆகிய நாடுகளும் எகிப்துடன் சேர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக மாறியுள்ளன. சவூதி அரேபியாவும் இந்தப் பட்டியலி்ல் இடம் பெற்றுள்ளது.
ஹமாஸ் தலையெடுத்து விட்டால், வலுவடைந்து விட்டால் தங்களது நாட்டையும் அது பாதிக்கலாம் என்ற அச்சத்தால்தான் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலையை இந்த அரபு நாடுகள் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வில்சன் மையத்தின் ஆய்வாளரும், முன்னாள் மத்திய கிழக்கு சமரசப் பேச்சுக் குழுவில் இடம் பெற்றவருமான ஆரோன் டேவிட் மில்லர் கூறுகையில், இது வரலாறு காணாத அமைதி. இப்படி ஒரு நிலையை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை இந்த நாடுகள் வேடிக்கை பார்க்க காரணம் உள்ளது. ஹமாஸ்தான் அவற்றின் முக்கிய பயம். அதுதான் இஸ்ரேலுக்கு ஆதரவாக இவர்கள் திரும்பக் காரணம்.
உண்மையில் எகிப்துதான் ஹமாஸுக்கு முக்கிய ஆதரவாளராக ஒரு காலத்தில் திகழ்ந்த நாடாகும். ஆனால் இந்த முறை இஸ்ரேலுக்கு சாதகமான முறையில் அது ஒரு போர் நிறுத்த உடன்பாட்டை அறிவித்தபோது ஹமாஸ் அதிர்ந்து போனது. அந்த திட்டத்தை அது உடனடியாக நிராகரித்தது. அந்தத் திட்டத்தில் இஸ்ரேலின் கோரிக்கைகள்தான் அதிக அளவில் இடம் பெற்றிருந்தன. ஹமாஸின் பரிந்துரை எதுவுமே இடம் பெறவில்லை.
18 மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல் அரசியல் ஆய்வாளர்கள் ஒரு எச்சரிக்கையை வெளிப்படுத்தினர். அதாவது அரபு நாடுகளில் ஹமாஸ் அமைப்பு வலுவாகிக் கொண்டு அந்த நாடுகளின் மூலம், இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளைத் திருப்ப முயற்சிக்கிறது என்பதுதான் அது. ஆனால் இந்த எச்சரிக்கையைக் கண்டு இஸ்ரேல் கூட அவ்வளவாகப் பயப்படவில்லை. மாறாக அரபு நாடுகள்தான் பயந்து போயின. காரணம், அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு எங்கே தங்களுக்கு எதிராக மக்கள் திரும்பி விடுவார்களோ என்ற அச்சம். எனவேதான் இந்த முறை இஸ்ரேலின் தாக்குதலை அவர்கள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
இஸ்ரேலைக் கூட எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் ஹமாஸ் வலுவடைந்து விட்டால் அது தங்களுக்குத்தான் பெரும் ஆபத்து. இஸ்ரேலை விட ஹமாஸ்தான் பெரும் மிரட்டல் என்றும் அரபு நாடுகள் கருதுகின்றனவாம்.
தற்போது காஸாவில் அப்பாவி மக்கள் பலியாகி வருவதற்கு ஹமாஸ்தான், அதன் பிடிவாதம்தான் முக்கியக் காரணம் என்று எகிப்து அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் இஸ்ரேலைக் குறை சொல்வதில்லை.
அதை விட மோசமாக எகிப்து நாடு தனது எல்லையை மூடி விட்டது. அங்கிருந்து பாலஸ்தீனத்திதற்குள் உணவு, மருந்து, குடிநீர் என எதையுமே அது அனுமதிக்கவில்லை. இதுவும் காஸா மக்களை அதிர வைத்துள்ளது. கிட்டத்தட்ட யாருமே இல்லாத அநாதைகளின் நிலையில் காஸா மக்கள் தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர்.
யூதர்களை விட மோசமானவர்கள் எகிப்தியர்கள் - காஸா மக்கள்
இதுகுறித்து காஸாவைச் சேர்ந்த சல்ஹான் அல் ஹிரிஷ் கூறுகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதான்யஹுவை விட மோசமானவர் எகிப்து தலைவர் சிஸ்ஸி. யூதர்களை விட மிகக் கொடூரமானவர்கள் எகிப்தியர்கள். எங்களை அழிக்க அவர்கள் சதி செய்து விட்டனர் என்றார் கோபத்துடன்.
எகிப்துக்கு ஹமாஸ் பெரும் பிரச்சினை என்றால் ஐக்கிய அரபு எமிரேட்ஸும், சவூதி அரேபியாவும் வேறு கணக்கில் ஹமாஸை எதிர்க்கின்றன. அதாவது அவர்களின் பரம்பரை வைரியான ஈரான், ஹமாஸுக்கு பெருமளவில் பொருளுதவி, ஆயுத உதவியை அளித்த நாடாகும். எனவே ஈரான் கை ஓங்குவதைத் தடுக்க அவர்கள் ஹமாஸை எதிர்க்க முடிவெடுத்தன.
அரபு நாடுகளின் இந்த மாற்றம் காரணமாக சமரசம் பேச வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியே கூட குழம்பிப் போய் விட்டார். காரணம், ஹமாஸுடன் பேச யாருமே முன்வராத நிலை. இஸ்ரேலும் சொல் பேச்சைக் கேட்பதாக இல்லை. இதனால்தான் சமரசம் பேச வந்த கெர்ரி மீண்டும் அமெரிக்காவுக்கேத் திரும்பிப் போய் விட்டார்.
இப்படி ஹமாஸ், இஸ்ரேல், அரபு நாடுகளின் மோதலால், கடைசியில் அப்பாவி பாலஸ்தீன மக்கள்தான் செத்து விழுந்து கொண்டுள்ளனர். இந்த அவலம் நிற்கப் போவது எப்போதோ... தெரியவில்லை.
ஒருபுறம் பாலஸ்தீனம் அழிவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது... அழிவுகளுக்குப்பிறகு அவர்களுக்கு புணர்வாழ்வு அளிப்பதாக உதவி செய்வது என்பன போன்ற முனாஃபிக் தனம் இன்றைய அரபு நாட்டு அரசுகளுக்கு ராஜதந்திரம்போல் தோன்றலாம். ஆனால் அனைத்து அதிகாரத்திற்கும், ஆட்சிக்கும் அதிபதியான அல்லாஹ்வை இவர்கள் ஒருபோதும் ஏமாற்றவே முடியாது. கேள்விகணக்கு கேட்கப்படும் அந்த மறுமை நாளில் இவர்களின் கதி என்னவாகும் என்பதை அவர்கள் சிந்திப்பது நல்லது.
8/01/2014 07:31:00 PM | 0 நல்ல கருத்துரைவழங்கியோர்: | Read More

தஹஜ்ஜத்/ தராவீஹ்/ வித்ரு/ இரவுத் தொழுகை/ ஓர் அலசல்

(தமிழ் முஸ்லிம்களிடம் இத் தொழுகைகள் பற்றி நிறைய சந்தேகங்கள் உள்ளன அவற்றை அலசுகிறது இந்தக் கட்டுரை)நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தும் - விரும்பியும் தொழுத தொழுகை வித்ருத் தொழுகை ஆனாலும் இது கடமையான தொழுகையல்ல.
உங்களின் கடமையான தொழுகைப் போன்று வித்ருத் தொழுகை கடைமையானதல்ல எனினும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதை சுன்னத்தாக்கியுள்ளார்கள்.
'அல்லாஹ் ஒற்றையானவன். அவன் ஒற்றையை விரும்புகிறான் குர்ஆனையுடையவரகளே! வித்ருத் தொழுங்கள்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். (அலி - இப்னுஉமர்- இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹும் ஆகியோர் அறிவிக்கும் இச்செய்தி திர்மிதி 415, இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது)
வித்ருத் தொழுகையின் நேரம் 
1) உறங்குவதற்கு முன் வித்ரு தொழுதுவிடுமாறு எனக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கட்டளையிட்டார்கள் என்று அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதி 417)
2) இரவுத் தொழுகையின் கடைசியாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்பது நபிமொழி (இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 998)
3) சுப்ஹூக்கு முன் வித்ரை தொழுங்கள் பஜ்ர் நேரம் வந்து விட்டால் இரவுத் தொழுகை - வித்ரு முடிவடைந்து விடுகின்றன என்பது நபிமொழி (அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 431)
இந்த மூன்று ஹதீஸில் முதல் ஹதீஸூடன் மற்ற ஹதீஸ்கள் முரண்படுவதுபோல் தெரிகின்றன. முதல் ஹதீஸ் தூங்குமுன் வித்ரு தொழுது விட வேண்டும் என்கிறது. மற்றவை இரவின் கடைசிப் பகுதியில் வித்ரு தொழ வேண்டும் என்கின்றன. இந்த முரண்பாட்டை கலையும் விதமாகவும் மேலதிக விளக்கமாகவும் மற்றொரு ஹதீஸ் கிடைக்கின்றது.
உங்களில் எவரேனும் இரவின் இறுதிப் பகுதியில் விழிக்க முடியாது என்று அஞ்சினால் அவர் வித்ரு தொழுது விட்டு தூங்கட்டும். இரவில் எழலாம் என்று யாருக்கு நம்பிக்கை இருக்கிறதோ அவர் இரவின் கடைசியில் வித்ரை தொழட்டும் ஏனெனில் இரவின் இறுதிப் பகுதியில் குர்ஆன் ஓதும் போது மலக்குகள் அங்கு வருகிறார்கள் இதுவே சிறந்ததாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். (ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: திர்மிதி 418, புகாரி முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இரவின் முற்பகுதியிலும், நடுப்பகுதியிலும், இரவின் கடைசிப் பகுதியிலும் வித்ரு தொழுவார்கள் மரணத்தை நெருங்கிய காலத்தில் அவர்களின் வித்ரு தொழுகை ஸஹர் நேரம் வரை சென்றது என ஆய்ஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்கள்: முஸ்லிம் - திர்மிதி 419)
இந்த ஹதீஸ்களிலிருந்து வித்ரு தொழுகையின் நேரத்தை அறிந்துக் கொள்ளலாம்.
இனி பலதரப்பட்ட தொழுகை என்று மக்கள் எண்ணிக் கொண்டிருக்கும் தொழுகைகளைப் பார்த்து விட்டு வித்ரைத் தொடர்வோம்.
1) ஸலாத்துல் லைல் 2) கியாமுல்லைல் 3) தஹஜ்ஜத்து 4) தராவீஹ் 5) வித்ரு
இப்படி ஐந்து வித தொழுகைகளை மக்கள் விளங்கி வைத்துள்ளனர். இந்த தொழுகைகளையும் அதன் எண்ணிக்கைகளையும் புரிந்துக் கொள்வதில் அவர்களுக்கு ஏகப்பட்ட குழப்பம். அறிஞர்களின் தடுமாற்றம் இவர்களின் குழப்பத்தை மேலும் தீவிரப்படுத்தி விடுகின்றது.
ஐந்துப் பெயர்களால் அழைக்கப்படும் இந்த தொழுகைகளை ஐந்து விதமான தொழுகை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள். இது உண்மையா என்றால் நிச்சயமாக இல்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகைகள் பற்றிய ஹதீஸ்ககளை ஆய்வு செய்யும் எவரும் இவைகள் ஐந்துவித தொழுகைகள் அல்ல. மாறாக ஒரே தொழுகைக்கு சூட்டப்பட்டுள்ள ஐந்துப் பெயர்கள் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி விளங்கிக் கொள்வார்கள்.
இது இந்தத் தொழுகை! இது இந்தத் தொழுகை!! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெயர் சூட்டி இரவில் எந்தத் தொழுகையையும் தொழவில்லை அவர்களின் வழமையான தொழுகைகளும் அதன் எண்ணிக்கைகளும் ஒரே விதமாக இருந்தன. அதை மக்களுக்கு விளக்க வந்தவர்கள் தான் ஒரே தொழுகையை பல பெயர்களால் அறிமுகப்படுத்தி விட்டனர்.
இரவில் தொழுவதால் 'ஸலாத்துல் லைல்' இரவுத் தொழுகை என்றும், இரவில் நின்று வணங்குவதற்கு ஆர்வமூட்டப்பட்டதால் 'கியாமுல் லைல்' என்றும், குர்ஆனில் 'தஹஜ்ஜத்' என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் 'தஹஜ்ஜத்' என்றும் அந்த தொழுகை ஒற்றைப்படையில் முடிவதால் 'வித்ரு' என்றும் அந்த தொழுகைக்கு பெயர்வந்தது.
தொழுகை ஒன்றுதான் அந்த தொழுகையின் தன்மையையும் நேரத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டவர்கள் பல பெயர்களை அந்த தொழுகைக்கு சூட்டி விட்டனர்.
தராவீஹ் என்ற பெயரிலோ அல்லது அப்படி புரிந்துக் கொள்ளும் விதத்திலோ நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் எந்த ஒரு தொழுகையும் தொழப்படவில்லை. மற்ற வார்த்தைகளாவது ஹதீஸ்களில் கிடைக்கின்றன. தராவீஹ் என்ற வார்த்தை எந்த ஒரு ஹதீஸிலும் வரவே இல்லை.
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த தொழுகைகளை பெயர் குறிப்பிட்டு தொழுததில்லை என்று கூறுகிறீர்களே... ஆனால் வித்ரு என்று ஏராளமான ஹதீஸ்களில் பெயர் வருகிறதே..'' என்று யாருக்காவது சந்தேகம் வரலாம்.
'வித்ரு' என்ற வார்த்தையை மொழிப் பெயர்க்காமல் விட்டுவிடுவதால் தான் இந்த சந்தேகம் வருகிறது.
'உங்கள் இரவுத் தொழுகையில் கடைசியாக வித்ரை ஆக்குங்கள்' என்பது ஹதீஸ். ஹதீஸ் வாசகங்கள் எல்லாவற்றையும் மொழி பெயர்க்கும் நாம் 'வித்ரு' என்பதை அப்படியே விட்டுவிடுகிறோம். அதனால் அது தனி தொழுகைப் போன்று தெரிகிறது. வித்ரை மொழிப் பெயர்க்கும் போது இந்த குழப்பங்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து விடும்.
'வித்ரு' என்ற வார்த்தைக்கு 'ஒற்றை' அல்லது 'ஒற்றைப்படை' என்று பொருள்.
உங்கள் இரவுத் தொழுகையில் கடைசியை ஒற்றைப்படையிலாக்குங்கள் என்று மொழி பெயர்க்கும் போது தெளிவான விளக்கம் கிடைத்து விடுகிறது.
எந்த ஹதீஸ் நூல்களை எடுத்துக் காட்டி அறிஞர்கள் தஹஜ்ஜத் தொழுகைத் தனி - வித்ருத் தொழுகைத் தனி, ஸலாத்துல் லைல் தனி என்று கூறுகிறார்களோ அதே ஹதீஸ் நூல்களில் அந்தந்த தலைப்பிற்கு கீழ் ஒரே ஹதீஸ் வார்த்தை மாறாமல் இடம் பெற்றிருப்பதை ஊன்றி கவனிக்க வேண்டும். வெறும் தலைப்புகளை மட்டும் பார்த்து சட்டங்களை வகுத்துவிடக் கூடாது. அந்தந்த தலைப்பிற்கு கீழுள்ள ஹதீஸ்களின் வார்த்தைகளைப் பார்த்து அதிலிருந்துதான் சட்டங்களை வகுக்க வேண்டும். அப்படி ஆய்வு செய்பவர்களுக்கு இது தனி தனி தொழுகை என்ற குழப்பம் ஏற்படவே செய்யாது.
எண்ணிக்கைகள்.
13 ரக்அத்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதிமூன்று ரக்அத் வித்ரு தொழுவார்கள். அவர்கள் முதுமையடைந்ததும் ஏழு ரக்அத் வித்ரு தொழுதுள்ளார்கள். (ஆய்ஷா - உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹுமா நூல்கள்: நஸயி - திர்மிதி 420)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதிகப்படியாக பதிமூன்று ரக்அத்களும், குறைவாக ஒரே சலாமில் ஏழு ரக்அத்களும் தொழுதுள்ளார்கள். இதைவிட எண்ணிக்கையை அதிகப்படுத்தவோ குறைக்கவோ இல்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள் ஐந்து ரக்அத்களை ஒற்றைப்படையில் (வித்ராக) தொழுவார்கள். அவ்வாறு தொழும் போது கடைசி இருப்பைத் தவிர மற்ற ரக்அத்களில் உட்கார மாட்டார்கள். (அதாவது நான்கு ரக்அத்களை தொடர்சியாக தொழுது - நடுவில் உட்கார்ந்து அத்தஹிய்யாத்து ஓதாமல் - ஐந்தாம் ரக்அத்தில் உட்கார்ந்து ஓதி முடிப்பார்கள்) ஆய்ஷா - அபூ அய்யூப் ரளியல்லாஹு அன்ஹும்,  (நூல்கள்: முஸ்லிம் - திர்மிதி 421 அபூதாவூத்)
11 ரக்அத்கள்.
ரமளானில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது என்று நான் ஆய்ஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்டேன். ரமளானிலும் ரமளான் அல்லாத காலங்களிலும் நபியவர்கள் பதினோரு ரக்அத்களை விட அதிகப்படுத்தியதில்லை. முதலில் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்டுவிடாதே.. (அதாவது அந்த தொழுகை அவ்வளவு அழகாக இருக்கும்) பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றி கேட்டுவிடாதே... பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள். (ஆய்ஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: புகாரி அத்தியாயம் தஹஜ்ஜத் ஹதீஸ் எண் 1147, திர்மிதி 403 அனைத்து ஹதீஸ் நூல்களிலும் இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது)
ரமளான் ரமளான் அல்லாத நாட்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்த வித்தியாசமும் செய்யாமல் இரவுத் தொழுகையை 11 ரக்அத்களாகவே நீடித்துள்ளார்கள் என்பதற்கு இந்த ஹதீஸ் வலுவான சான்றாக உள்ளது
நபியவர்கள் பதினோரு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள் அதுவே அவர்களின் இரவுத் தொழுகையாக இருந்தது. (ஆய்ஷா ரளியல்லாஹு அன்ஹா, புகாரி அத்தியாயம் வித்ரு எண் 994)
எனது சிறிய தாயார் மைமுனா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் வீட்டில் நான் ஒரு நாள் தங்கினேன் நான் தலையணையின் பக்கவாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபியவர்களும் அவர்களின் மனைவியும் தலையணையின் சீள வாக்கில் தூங்கினார்கள். இரவின் பாதிவரை நபியவர்கள் தூங்கினார்கள் பின்னர் விழித்து தங்கள் கையால் முகத்தை தடவி தூக்க கலக்கத்தை போக்கிவிட்டு ஆல இம்ரான் அத்தியாயத்தின் இறுதி பத்து வசனங்களை ஓதி விட்டு எழந்து சென்று தொங்கவிடப் பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து தண்ணீர் சாய்த்து ஒளு செய்தார்கள். பின்னர் தொழுவதற்காக நின்றார்கள் நானும் அவர்களின் இடது புறம் போய் நின்றேன் எனது காதைப் பிடித்து இழுத்து வலது பக்கம் நிறுத்தினார்கள்.
இரண்டு ரக்அத் தொழுதார்கள்,
மேலும் இரண்டு ரக்அத் தொழுதார்கள்,
இன்னும் இரண்டு ரக்அத் தொழுதார்கள்,
மீண்டும் இரண்டு ரக்அத் தொழுதார்கள்,
மறுபடியும் இரண்டு ரக்அத் தொழுதார்கள்,
பின்பு ஒற்றப்படையில் (வித்ரு) தொழுதார்கள். (இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி அத்தியாயம் வித்ரு எண் 992, 1198)
9 ரக்அத்துகள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒன்பது ரக்அத்துகளாக ஒற்றைப்படையில் (வித்ரு) தொழுவார்கள். எட்டாம் ரக்அத்தில் உட்கார்ந்து எழுந்து ஒன்பதாம் ரக்அத்தில் சலாம் கொடுப்பார்கள். (இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: முஸ்லிம் நஸயி அஹ்மத்)
7 ரக்அத்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏழு ரக்அத் வித்ரு (ஒற்றைப்படையில்)தொழுதால் ஆறாம் ரக்அத்தில் உட்கார்ந்து எழுந்து ஏழாம் ரக்அத்தில் ஸலாம் கொடுப்பார்கள். (ஆய்ஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: அபூதாவூத் - நஸயி - அஹ்மத்)
5 ரக்அத்கள்.
நபியவர்கள் இரவில் 13 ரக்அத்கள் தொழுவார்கள். ஐந்து ரக்அத்தை ஒற்றைப்படையில் (வித்ராக) தொழுவார்கள் (அப்படி தொழும்போது) ஐந்தாம் ரக்அத்தில் உட்கார்ந்து ஸலாம் கொடுப்பார்கள். (ஆய்ஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: புகாரி - முஸ்லிம் - திர்மிதி 421)
3 ரக்அத்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். (ஆய்ஷா ரளியல்லாஹு அன்ஹா இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம், நஸயி, அஹ்மத், பைஹகி)
கிராஅத்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒற்றப்படைத் தொழுகையின்(வித்ரின்) மூன்று ரக்அத்தில் முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா' என்ற சூராவையும், இரண்டாம் ரக்அத்தில் 'குல்யா அய்யுஹல் காபிரூன்' என்ற அத்தியாயத்தையும், மூன்றாம் ரக்அத்தில் 'குல்ஹீவல்லாஹூ அஹத்' என்ற அத்தியாயத்தையும் ஓதுவார்கள் என உபை பின் கஃபு ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். நூல்கள்: திர்மிதி 424, அஹ்மத், நஸயி, இப்னுமாஜா)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூன்று ரக்அத் வித்ரு தொழுதால் ஒவ்வொரு ரக்அத்திலும் மூன்று அத்தியாயங்கள் விதம் ஒன்பது அத்தியாயங்களை ஓதுவார்கள் கடைசி அத்தியாயாத்தில் குல்ஹூவல்லாஹூ அஹத் சூராவை ஓதுவார்கள் என்று திர்மிதியில் ஒரு செய்தி வருகிறது அலி ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாக வரும் இச்செய்தி பலவீனமானதாகும் ஏனெனில் இதன் அறிவிப்பாளர் தொடரில் அல் ஹாரிஸ் அல் அஃவர் என்பவர் இடம் பெறுகிறார் அவர் பொய்யராவார் அதனால் இது ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல.
யார் ஐந்து ரக்அத் தொழு விரும்புகிறாரோ அவர் ஐந்து தொழலாம், யார் மூன்று ரக்அத் தொழ விரும்புகிறாரோ அவர் மூன்று தொழலாம், யார் ஒரு ரக்அத் தொழ விரும்புகிறாரோ அவர் ஒன்று தொழலாம் என்பது நபிமொழி (அபூ அய்யூப் அல் அன்சாரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: நஸயி, அபூதாவூத், இப்னுமாஜா)
வித்ரும் மஃரிபும் வித்தியாசப்பட வேண்டும்
மூன்று ரக்அத் வித்ரு தொழுதால் மஃரிபைப் போன்று வித்ரை ஆக்கி விடாதீர்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: ஹாக்கிம், தாரகுத்னி, இப்னுஹிப்பான்)
மூன்று ரக்அத் வித்ரு தொழும் போது எவ்வாறு தொழுவது? மஃரிபைப் போன்று வித்ரை ஆக்காதீர்கள் என்று ஹதீஸ் வந்துள்ளதால் வித்தியாசப்படுத்தி தொழ வேண்டும். முதலில் இரண்டு தொழுது ஸலாம் கொடுத்து பின்னர் ஒன்று தொழுது சிலர் வித்தியாசப்படுத்துகிறார்கள்.
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு இவ்வாறு தொழுதுள்ளதாகவும் கூறுகிறார்கள். இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்வாறு தொழுதது உண்மைதான் (நூல்: புகாரி 991)
ஆனால் அவர்கள் தொழுத மூன்று ரக்அத்தையும் சேர்த்து அவர்கள் வித்ரு என்று சொல்லவில்லை. இரண்டு ரக்அத் தொழுது ஸலாம் கொடுத்து பிரித்ததன் மூலம் அது மூன்றாம் ரக்அத்துடன் சேராது என்பதை விளங்கலாம். பின்னர் தொழுத ஒரு ரக்அத் மட்டுமே (ஒற்றையாக இருப்பதால்) வித்ரு தொழுகையாகும்.
ஹனபி மத்ஹப் காரர்கள் போன்று தொழுவதற்கும் ஆதாரம் எதுவுமில்லை. இரண்டாம் ரக்அத்தில் உட்கார்ந்து அத்தஹிய்யாத்து ஓதுவதன் மூலம் அவர்கள் வித்ரை மஃரிபு போன்றே ஆக்கி விடுகிறார்கள். மூன்றாம் ரக்அத்தில் ருகூவிற்கு பிறகு கைகளை உயர்த்துவதால் மட்டும் அது மஃரிபிலிருந்து வித்தியாசப்பட்டு விடாது.
மூன்று ரக்அத் தொழும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எவ்வாறு தொழுதார்களோ அவ்வாறு தொழுவதே சரியாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுதால் கடைசி ரக்அத்தில் தான் உட்காருவார்கள் ஸலாம் கொடுப்பார்கள் என ஆய்ஷா - உபை பின் கஃபு ரளியல்லாஹு அன்ஹும் அறிவிக்கிறார்கள். (நூல்: நஸயி)
இரண்டு ரக்அத்தில் ஸலாம் கொடுத்து பிரிக்காமல், அத்தஹிய்யாத்து ஓதாமல் நேராக எழுந்து மூன்றாம் ரக்அத்தையும் தொழுது இறுதியில் ஸலாம் கொடுப்பது தான் நபிவழியாகும். இவ்வாறு செய்வதன் மூலம் வித்ரு தொழுகை மஃரிபு தொழுகையிலிருந்து வித்தியாசப்பட்டு விடுகிறது.
1 ரக்அத்.
இஷாவிலிருந்து சுப்ஹ் வரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். ஒவ்வொரு இரண்டு ரக்அத் முடிவிலும் ஸலாம் கொடுப்பார்கள். பின்னர் ஒரு ரக்அத் தொழுவார்கள். (ஆய்ஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், நஸயி)
நாம் மேலே எடுத்துக் காட்டியுள்ள எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுதுள்ளார்கள் என்பதற்கு எந்த ஒரு ஹதீஸூம் இல்லை.
13 ரக்அத்களை விட அதிகமாக தொழவேக் கூடாதா...?
தொழலாம் தடையில்லை ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்வாறு தான் தொழுதுள்ளார்கள் என்று (பொய்) கூறி அந்த கூடுதல் ரக்அத்களை சுன்னத்தாக்கக் கூடாது.
இரவுத் தொழுகையை எவ்வாறு தொழ வேண்டும் என்று ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'இரண்டிரண்டு ரக்அத்களாக தொழு. சுப்ஹ் வந்து விட்டால் ஒரு ரக்அத் தொழுது முடித்துக் கொள்' என்றார்கள். (இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹும், நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி)
எண்ணிக்கையை வரையறுக்காமல் இரண்டிரண்டாக தொழு என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளதால் அவரவர் விரும்பும் அளவிற்கு சுப்ஹ்வரை எத்துனை ரக்அத்களும் தொழலாம். 13 ரக்அத்களை தாண்டி சிலருக்கு 30 ரக்அத்கள் தொழ விருப்பம் இருந்தால் தொழலாம். சிலருக்கு அதிகப்படியாக வெறும் இரண்டு ரக்அத்கள் மட்டும் தொழ விருப்பம் இருந்தால் அவர்கள் அவ்வாறு செய்யலாம். நாற்பது - ஐம்பது என்று சுப்ஹ்வரை தொழ ஒருவர் விரும்பினால் கூட அவர் தொழலாம். அதற்கு இந்த ஹதீஸ் அனுமதியளிக்கிறது. ஆனால் பதினோரு ரக்அத்களை தாண்டி இத்துனை ரக்அத்கள் தான் தொழ வேண்டும் இருபது ரக்அத்கள் தான் தொழ வேண்டும் என்று ரக்அத்களின் எண்ணிக்கையை வரையறுக்கும் உரிமை அவற்றை சுன்னத்தாக்கும் உரிமை எவருக்கும் இல்லை. அதிகப்படியாக தொழும் தொழுகை அவரவரின் தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்ததாகும்.
ஜமாஅத்தாக தொழுவது.
ரமளானில் ஏழுநாட்கள் எஞ்சியிருக்கும் வரை (அதாவது 23 நாட்கள்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களுக்கு தொழுகை நடத்தவில்லை. 24ம் இரவில் மூன்றில் ஒரு பகுதி முடியும் வரை எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள் அடுத்த நாள் தொழுகை நடத்தவில்லை 26ம் இரவில் பாதி இரவு கழியும் வரை தொழுகை நடத்தினார்கள். அடுத்த நாள் தொழுகை நடத்தாமல் 28ம் நாள் தொழுகை நடத்தினார்கள். தொழுகைக்கு குடும்பத்தினரையும் - மனைவிகளையும் அழைத்தார்கள். ஸஹர் செய்தல் தவறி விடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவிற்கு தொழுகையை நீட்டினார்கள். (அடுத்தடுத்த நாள் தொழவில்லை) என்று ஜூபைர் பின் நுமைர் அறிவிக்கிறார்கள் (நூல்: திர்மிதி 734)
இதே செய்தி ஆய்ஷா ரளியல்லாஹு அன்ஹா வழியாக புகாரியில் வருகிறது. மக்கள் திரண்டு தொழுகைக்காக காத்துக் கொண்டிருந்த போது வெளியில் வராத நபி(ஸல்) அவர்கள் சுப்ஹ் தொழுகைக்கு வந்து ''நீங்கள் தொழுகைக்காக காத்துக் கொண்டிருந்தது எனக்கு தெரியும் ஆர்வத்தின் காரணமாக அல்லாஹ் இந்த தொழுகையை கடமையாக்கி விடுவானோ.. என்று அஞ்சி தான் நான் வரவில்லை'' என்று சொன்ன செய்தி கிடைக்கிறது. (நூல்: புகாரி 1129)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இஷாவிலிருந்து சுப்ஹ் வரை 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள். தஹஜ்ஜத்தும்; அதுதான், தராவீஹும் அதுதான், இரவுத் தொழுகையும் அதுதான், வித்ருத் தொழுகையும் அதுதான்.
வித்ரில் குனூத்.
வித்ரில் ஓதுவதற்காக எனக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துஆவை கற்றுக் கொடுத்தார்கள் என ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
اللهّم اهد ني فيمن هديت وعافني فيمن عافيت وتولّني فيمن توليت وبارك لي فيما أعطيت وقني شرَّ ما قضيت فإنّك تقضي ولا يقضى عليك وإنه لا يذلُّ من واليت تباركت ربنا وتعاليت
அல்லாஹூம்மஹ்தினீ ஃபிமன் ஹதைத்த, வ ஆஃபினி ஃபீமன் ஆஃபைத்த, வதவல்லனி ஃபீமன் தவல்லைத்த, வபாரிக்லி ஃபீமா அஃதைத்த, வகினீ ஷர்ர மா க்கலைத்த, வஇன்னக்க தக்ளீ வலா யுக்ளா அலைக்க, வஇன்னஹூ லா யதில்லு மன் வாலைத்த, தபாரக்த ரப்பனா வதஆலைத்த.
பொருள்: இறைவா நீ யாருக்கு நேர்வழி காட்டினாயோ அவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! நீ யாருக்கு துன்பங்களை துடைத்தாயோ அவர்களுடன் எனது துன்பங்களையும் துடைப்பாயாக! நீ யாருக்கு பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக! நீ வழங்கியவற்றில் எனக்கு பரக்கத் செய்வாயாக! நீ விதியாக்கியதின் கெடுதியை விட்டும் என்னை காப்பாயாக! நிச்சயமாக நீயே விதிப்பவன். உன்மீது எதையும் விதிக்க முடியாது! நீ யாரை நேசித்து விட்டாயோ அவர் இழிவடைய மாட்டார். எங்கள் இறைவா! உன் அருள் விசாலமானது உன் மகத்துவம் மேலானது. (நூல்: திர்மிதி 429)
இந்த துஆவை இரவுத் தொழுகையின் ஒற்றைப்படை(வித்ரு) கடைசி ரக்அத்தில் ருகூஃவிற்கு முன்போ - பின்போ அவரவர் விருப்பப்படி ஓதிக் கொள்ளலாம். இரண்டு நிலையிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குனூத் ஓதியதற்கு ஆதாரம் கிடைக்கின்றன. (ஹஸன் - உபை பின் கஃபு ரளியல்லாஹு அன்ஹும்) வழியாக ஹாக்கிம் அபூதாவூத் நஸயி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குனூத் ஓதும் சந்தர்பங்களில் கைகளை உயர்த்தியதற்கு ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. அதே போன்று குனூத்திற்கு ஆமீன் சொல்வதற்கும் ஆதாரம் கிடைக்கவில்லை. மக்கா மதீனா போன்ற இடங்களில் கைகளை உயர்த்தி குனூத் ஓதினாலும் பிறர் அதற்கு ஆமீன் சொன்னாலும் நமக்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்பதால் அந்த சந்தர்பங்களில் நாம் அமைதியாக நின்றுக் கொள்ள வேண்டும் என்பதே சரியாகப்படுகிறது. (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)


7/18/2014 11:35:00 AM | 0 நல்ல கருத்துரைவழங்கியோர்: | Read More

பெண் -அலங்காரம்

ஒரு பெண் தனது உடலில் அழகு சாதனங்களால் செயற்கை முறையில் அலங்கரித்துக் கொள்வதும் அழகை மெருகேற்றிக் கொள்வதுமே அலங்காரம் எனப்படுகின்றது.
நகை அணிவதும், பவுடர் போடுவதும், தலைக்குப் பூ வைத்துக் கொள்வதும், இன்னபிற சாயங்களைப் பூசிக் கொள்வதும் (மேக்கப் செட்), தலைமுடியை விரும்பியவாறெல்லாம் வடிவமைத்துக் கொள்வதும் அலங்காரம் எனலாம். விரும்பினால் உடலுக்குக் கேடு தராது எனில் உதட்டுச் சாயம் கூட ஒரு பெண் பூசிக் கொள்ளலாம்.
ஆனால் இந்த அலங்காரத்தையெல்லாம் யார் யாரிடம் காட்டலாம் என்கின்ற விபரங்களை முஸ்லிமான பெண்கள் நிச்சயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
ஒரு பெண், மஹ்ரமான ஆணைச் சந்திக்க நேரிட்டால் அவள் தனது அலங்காரத்தை எப்படி அமைத்துக் கொள்வது என்பது குறித்து திருக்குர்ஆன் சில சட்டங்களைக் கூறுகின்றது.
ஒரு பெண் அந்நிய ஆடவர் ஒருவரைச் சந்திக்கும் போது, பெண்ணுக்கு நெருக்கமான, திருமனத்திற்குத் தடை செய்யப்பட்ட உறவினர் பெண்ணுடன் இருந்தாலும் அந்த நேரத்தில் சில விதிமுறைகளைப் பேண வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.
தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.
அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 24:31)
நகை அணிவதும், பவுடர் போடுவதும், தலைக்குப் பூ வைத்துக் கொள்வதும், இன்னபிற சாயங்களைப் பூசிக் கொள்வதும் (மேக்கப் செட்), தலைமுடியை விரும்பியவாறெல்லாம் வடிவமைத்துக் கொள்வதும் அலங்காரம் எனலாம். விரும்பினால் உடலுக்குக் கேடு தராது எனில் உதட்டுச் சாயம் கூட ஒரு பெண் பூசிக் கொள்ளலாம். ஒரு பெண் தனது உடலில் அழகு சாதனங்களால் செயற்கை முறையில் அலங்கரித்துக் கொள்வதும் அழகை மெருகேற்றிக் கொள்வதுமே அலங்காரம் எனப்படுகின்றது.
இதுபோன்ற இயற்கை அழகை மெருகேற்றி, அலங்காரம் செய்து கொண்டால் அந்த அலங்காரத்தை யார் யார் முன்னால் காட்டிக் கொள்ளலாம் என்றும் யார் முன்னால் காட்டக் கூடாது என்றும் விதிமுறைகளை அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் சொல்லிக் காட்டுகிறான்.
அலங்காரத்தைக் காட்ட அனுமதிக்கப்பட்டவர்கள்
முதலாவதாக, ஒரு பெண் தனது அலங்காரத்தை கணவனுக்குக் காட்டலாம். இதற்குத் தான் திருமணமே நடைபெறுகிறது.
பிறகு, ஒரு பெண் தனது தந்தைக்கு முன்னால் அலங்காரமாக இருந்து கொள்ளலாம். தனது மகளின் எந்த மாதிரியான அலங்காரத்தைப் பார்த்தாலும் தந்தைக்குக் கெட்ட எண்ணங்கள் ஏற்படாது. அந்தப் பெண்ணுக்கும் வராது.
ஒரு பெண் தனது தந்தைக்கு முன்னால் அலங்காரத்தைக் காட்டிக் கொண்டிருப்பது போன்று தனது கணவனின் தந்தை, அதாவது மாமனார் முன்னாலும் வெளிப்படுத்திக் கொள்ளலாம். அது மார்க்கத்தில் தவறில்லை.
அடுத்து, தனது மகனுக்கு முன்னால் அலங்காரம் தெரியும் வகையில் ஒரு பெண் இருந்தாலும் அவள் மீது குற்றமில்லை. மகன் தன் முன்னால் இருக்கிறான் என்று ஒரு தாய் வெட்கப்படத் தேவையில்லை.
மகனும் தனது தாயைப் பற்றி, இவ்வளவு பெரிய வயதில் அலங்காரமெல்லாம் எதற்கு? என்று கேள்வி கேட்கக் கூடாது. அதைத் தவறாகவும் நினைத்துவிடக் கூடாது. என்னதான் தனக்குத் தாயாக இருந்தாலும் நம் தந்தைக்கு மனைவி எனும் போது, ஒரு மனைவி தனது கணவன் நினைப்பது போன்று நடந்தால் தான் கணவனின் அன்பைப் பெறமுடியும். அப்படிப் பெறுவது தான் மார்க்க அடிப்படையில் சரியானதாக இருக்கும். யாருக்கு முன்னிலையில் அலங்காரம் என்பது தான் முக்கியமே தவிர, அலங்காரமே கூடாது என்பது இஸ்லாத்தின் நிலைபாடல்ல என்பதைப் புரிய வேண்டும்.
ஒரு பெண்ணின் கணவருக்கு ஏற்கனவே முதலில் திருமணம் நடந்து அந்த மனைவியின் மூலமாக ஒரு ஆண் மகன் இருந்தால் அந்த ஆண் மகன் முன்னிலையிலும் ஒரு பெண் அலங்காரத்தைக் காட்டிக் கொள்வது குற்றமில்லை.
ஒரு பெண், தனது சகோதரர்கள் முன்னிலையில் அலங்காரத்துடன் இருப்பது குற்றமில்லை. சகோதரர்கள் என்றால் மூன்று வகையில் வருவார்கள். ஒன்று தன்னுடன் பிறந்தவர்கள், அல்லது தனது தாயின் வகையில் பிறந்தவர்கள், அல்லது தகப்பனார் வழியில் பிறந்தவர்கள். எந்த வகையில் சகோதரர்களாக இருந்தாலும் அவர்கள் முன்னிலையில் அலங்காரத்தை வெளிக்காட்டிக் கொள்வதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது.
தனது சகோதரர்களுடைய மகன் முன்னிலையில் ஒரு பெண் அலங்காரம் வெளிப்படுவது குற்றமல்ல. சகோதரிகளின் மகன்கள் முன்னிலையிலும் ஒரு பெண்ணின் அலங்காரம் வெளிப்படலாம்.
மற்ற பெண்களிடத்தில் ஒரு பெண் தனது அலங்காரத்தைக் காட்டிக் கொள்வது குற்றமில்லை. இதை அல்லாஹ் அனுமதித்துள்ளான். இதைத் தவறு என்று கூற முடியாது. இருப்பினும் பிற பெண்களை மட்டம் தட்டக் கூடாது. அப்படிச் செய்தால் அது பெருமையடிப்பது என்ற குற்றத்தில் சேர்ந்துவிடும்.
பெண்கள் சபையில் அந்நிய ஆண்கள் இருந்தால் அதில் அலங்காரத்தைக் காட்டுவதற்கு மார்க்கம் தடை செய்கிறது. இதற்கு உதாரணமாகச் சொல்வதென்றால், கல்யாண வீடுகளைச் சொல்லலாம். இங்கு அதுபோன்ற நிலை இருப்பதால்தான் அதைத் தவறு என்கிறோம். பெண்கள் மட்டுமே இருக்கிற ஒரு சபையில் ஒரு பெண் தன்னைப் போன்ற சக பெண்களிடம் தனது அலங்காரத்தைக் காட்டிக் கொள்வது தவறில்லை என்று இஸ்லாம் கூறுகிறது.
பெண்களின் மீது நாட்டமில்லாத நிலையை அடைந்த, தள்ளாத வயதுடைய ஆண்களின் முன்னால் ஒரு பெண் தனது அலங்காரத்துடன் நின்றுகொள்வது குற்றமில்லை. அந்நிய ஆணாக இருந்தாலும் தள்ளாத வயதுடையவர்கள் என்றால் கொள்ளுத் தாத்தா வயதுடையவர்கள் என்று பொருள். இதில் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி, வயது முக்கியம் என்பதை விட நிலை தான் கவனத்தில் கொள்ள வேண்டியது.
ஏனெனில் சிலர் எண்பது வயதிலும் வலுவானவர்களாகவும் பெண்கள் மீது நாட்டம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்களை இந்தச் செய்தி குறிக்காது. பெண்கள் மீது நாட்டமில்லாத நிலை என்றால் இல்லறத்திற்குத் தகுதியில்லாதவர், அதன் மீது நாட்டம் ஏற்படாத அளவுக்கு முதிர்ந்தவர் என்ற பொருள் தான் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய செய்தியாகும்.
பெண்களின் மறைவிடங்களைப் பற்றிய அறிவு இல்லாத சிறுவர்களின் முன்னிலையில் ஒரு பெண் தனது அலங்காரத்துடன் நிற்பது குற்றமில்லை. இது காலத்திற்குக் காலம் மாறுபடக் கூடியதாகவும் இருக்கிறது. இந்தக் காலத்தில் 5 வயதிலேயே எல்லாம் தெரிகிற அளவுக்கு மாறிவிட்டது.
50 வருடங்களுக்கு முன்னால் 15 வயது ஆணுக்குக் கூட மறைவிட விவரங்கள் தெரியாமல் இருந்தது. கல்யாண மாப்பிள்ளைக்குக் கூட திருமணம் முடித்தவர்கள் "எதற்கு கல்யாணம் முடிக்கிறோம்' என்பதை சொல்லிக் கொடுக்கிற அளவுக்குத்தான் இருந்தது.
குடும்ப விவகாரங்களும் கணவன் மனைவி விவகாரங்களும் புரியாத சிறுவயது குழந்தைகளிடத்தில் ஒரு பெண் தனது அலங்காரத்தைக் காட்டிக் கொள்ளலாம். ஒரு கணவனும் மனைவியும் தனியாக அமர்ந்திருப்பது எதற்கு? என்ற காரணம் புரியுமானால் அந்த ஆண் பிள்ளை வளர்ந்து ஆளாகிவிட்டான் என்று பொருள். அப்படிப் புரியாதவனாக இருந்தால் அவன் குழந்தை என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அதுபோன்ற அந்நியச் சிறுவர்களிடம் ஒரு பெண் தனது அலங்காரத்தைக் காட்டிக் கொள்ளலாம். ஏனெனில் புரியாத வயதில் இருப்பவர்களுக்கு அந்தரங்க விஷயங்கள் ஈர்க்காது என்பதுதான் காரணமாகும்.
தங்களது கணவருடன் இருக்கும் போதோ, அல்லது திருமணத்திற்குத் தடை செய்யப்பட்ட உறவினருடன் இருக்கும் போதோ ஒரு பெண் அலங்காரத்துடன் இருக்கும் போது ஒரு அந்நிய ஆண் அவர்களைப் பார்க்க நேர்ந்தால் அப்போது அவரிடம் அலங்காரத்தைக் காட்டக் கூடாது.
கணவன் உடன் இருந்தாலும் அந்நிய ஆணிடம் அலங்காரத்தை ஒரு பெண் காட்டக் கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது. அதாவது நகை நட்டுக்கள் அணிந்திருந்தால் அல்லது மேக்கப் என்கிற அலங்காரச் சாயங்கள் பூசியிருந்தால் மஹ்ரமான உறவு தன்னுடன் இருந்தாலும் அந்நிய ஆணிடம் இவைகளைக் காட்டக் கூடாது என்று மேற்சொன்ன வசனம் நமக்குக் கட்டளையிடுகிறது.
அலங்காரத்தில் ஒரு பெண் தனது தகப்பனுடன் இருந்தாலும் எதிரில் இருக்கிற அந்நிய ஆணிடம் ஷைத்தான் கெட்ட எண்ணங்களை விதைத்து விடுவான். அதனால் தான் இறைவன் இவ்வசனத்தில் அலங்காரத்தைக் காட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டவர்களை பட்டியலிட்டுத் தந்துவிடுகிறான். இந்த பட்டியலில் உள்ளவர்களைத் தவிர மற்றவர்களிடம் அலங்காரத்தைக் காட்டிவிடக் கூடாது என்பதுதான் ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணுக்குரிய சட்டமாகும்.
இவை தவிர, இந்த வசனத்தில் இன்னும் சில செய்திகளை பெண்களுக்கு அறிவுறுத்துகிறான். ஒரு பெண் சலங்கைக் கொலுசு அணிவதைத் தடை செய்கிறது. சலங்கை இல்லாத, சத்தம் வராத முத்துக்கள் பதிக்காத கொலுசு அணிவதைத் தடை செய்யவில்லை. நடக்கிற போது சத்தம் வந்தால் அந்த சத்தம் அந்நிய ஆணை ஈர்த்திழுக்கும் ஒரு அபாயக் குரல் என்பதை பெண்கள் உணர வேண்டும்.
கொலுசு அணிவது பெண்களுக்கு உரியது என்று ஆகிவிடுகின்ற போது, சத்தம் வருகின்ற கொலுசு அணிந்தால் பிற ஆண்கள் அவர்களைப் பார்ப்பதற்குத் திரும்புவதைக் காண்கிறோம். பிறர் திரும்ப வேண்டும் என்பதற்காகவே கால்களை அடித்து நடக்கும் பெண்களையும் பார்க்கிறோம். இதைத்தான் அல்லாஹ் தடுக்கிறான்.
"அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம்.'' (அல்குர்ஆன் 24:31)
எனவே அலங்காரத்தைப் பெண்கள் யார் யாரிடம் காட்ட வேண்டும் என்பதற்கும் எப்படியெல்லாம் காட்டக் கூடாது என்பதற்கும் வரம்புகளை நிர்ணயம் செய்துள்ளான் இறைவன். அவற்றைப் பேணுவதுதான் ஒரு முஸ்லிமின் கடமையாகும்.
6/29/2014 10:39:00 AM | 0 நல்ல கருத்துரைவழங்கியோர்: | Read More

ஸஹர் நிகழ்ச்சி தேவையா?

இஃப்தார் நிகழ்ச்சி போல் ஸஹர் நிகழ்சிகளும் (அரசியல்) கேலிக்கூத்துகளின் அடையாளச் சின்னமாக மாறிக் கொண்டிருக்கின்றன...
முன்பு ஸஹர் நிகழ்ச்சி நடத்தாத முஸ்லிம் ஊடக நிறுவனங்களே இல்லை என்ற நிலை இருந்தது.
இன்று ஸஹர் நிகழ்ச்சி நடத்தாத முஸ்லிம் அமைப்புகளே இல்லை என்ற நிலை இருக்கிறது.
நாளை ஸஹர் நிகழ்ச்சி நடத்தாத அரசியல் கட்சிகளே இல்லை என்ற நிலை வந்து விடும்.
ரமளான் முழுவதும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் வழங்கப்பட்ட சஹர் நேர நிகழ்சிகளைப் பற்றி திறனாய்வு செய்து எழுதும் படி ஒரு நண்பர் என்னிடம் கேட்டுக் கொண்டார். திறனாய்வு செய்யும் அளவுக்கு நிகழ்ச்சிகள் ஒன்றும் பிரமாதமாய் இல்லை என்றாலும், அது குறித்து சில விசயங்களை விவாதிக்க வேண்டும் என தோன்றியது.
தொலைக்காட்சியை ஹராம் என்று சொல்லி அதிலிருந்து விலகி நின்ற தமிழ் முஸ்லிம் சமூகம், தொலைக்காட்சியின் வீச்சையும், அது பொது சமூக மத்தியில் ஏற்படுத்துகின்ற தாக்கத்தையும், தாமதமாகவேனும் புரிந்து கொண்டு அதைப் பயன்படுத்தி வருவது மகிழ்ச்சிக்குரியதே என்றாலும், ஒளிபரப்பு ஊடகத்தை [visual media] ஒலிபரப்பு ஊடகமாக [broadcost media] நம்மவர்கள் கையாண்டு வருவது கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.
திரையில் காட்சிகள் மாறிக் கொண்டே இருந்தால் தான் அது காட்சி ஊடகம். ஒரு மணிநேரம் முழுவதும் ஒருவர் முகத்தையே பார்த்துக் கொண்டு அவர் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தால் அது என்ன ஊடகம்?
இங்கே தொலைக்காட்சிகளில் வழங்கப்படும் ஒவ்வொரு முஸ்லிம் நிகழ்சிகளிலும் ஒவ்வொருவராக பேசிக் கொண்டே இருக்கிறார்கள், வேறு வழியே இல்லாமல் நாமும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.
காட்சி ஊடகத்தை காட்சி ஊடகமாகப் பயன்படுத்தக் கூடிய அனுபவமும், முதிர்ச்சியும், அறிவு வளர்ச்சியும் இன்றி, தொழில் நுட்பப் புரட்சி மிகுந்த இந்த 2010 -லும் கூட நாம் சிந்தனை வறட்சியிலேயே இருக்கிறோம் என்பதைத்தான் நம்முடைய ஊடகப் பயன்பாடு உணர்த்திக் கொண்டிருக்கிறது.
சஹர் நேர நிகழ்ச்சிகளில் எந்தச் சேனலைத் திறந்தாலும் ஒரே பேச்சு மயம் தான். கற்குவியல்களுக்கு இடையே சில சோற்றுப் பருக்கைகளைப் போல ஒரு சில நிகழ்சிகளைப் பார்க்க முடிந்தது.
மார்க்க ரீதியான கேள்வி பதில்களும், குழந்தைகளை ஈர்க்கும் வினாடி வினா போட்டிகளும் சற்று மன நிறைவைத் தந்தன. ஆனால், கடந்த காலங்களில் வித்தியாசமான நிகழ்சிகளை வழங்கி வந்த சிலரும் கூட, காலப் போக்கில் பேச்சு என்கிற பழைய நிலைக்கே திரும்பியிருப்பது நமக்கு அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது.அவர்களும் வழக்கமான 'பேச்சு' நீரோடையில் கலந்து கரைந்து போவதற்கான காரணம் என்ன என்பதை சற்று ஆராய வேண்டி உள்ளது.
காயல் இளவரசு தொடங்கி வைத்த சஹர்நேரத் தொலைக்காட்சி நிகழ்ச்சி, இன்றைக்கு மதிமுகவின் சீமா பஷீர் வரை வளர்ந்திருக்கிறது. அதாவது, காயல் இளவரசு என்னும் தனி நபரில் தொடங்கி, முஸ்லிம் அமைப்புகளிடம் தொடர்ந்து, இன்று மதிமுக என்னும் அரசியல் கட்சி வரை அது விரிவடைந்திருக்கிறது.
முன்பு சஹர் நிகழ்ச்சி நடத்தாத முஸ்லிம் ஊடக நிறுவனங்களே இல்லை என்ற நிலை இருந்தது.
இன்று சஹர் நிகழ்ச்சி நடத்தாத முஸ்லிம் அமைப்புகளே இல்லை என்ற நிலை இருக்கிறது.
நாளை சஹர் நிகழ்ச்சி நடத்தாத அரசியல் கட்சிகளே இல்லை என்ற நிலை வந்து விடும் என்பதைத்தான் மதிமுகவின் இவ்வருட சஹர் வருகை நமக்கு உணர்த்துகின்றது.
எப்படி இப்தார் நிகழ்ச்சி இன்றைக்கு அரசியல் கேலிக்கூத்துகளின் அடையாளச் சின்னமாக மாறி விட்டதோ, அதைப் போலவே சஹர் நிகழ்சிகளும் மாறிக் கொண்டிருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.
தனிநபர் சார்ந்த நிறுவனங்களால் வழங்கப்படும் நிகழ்சிகளால் சமூகத்திற்கு பெரிய அளவில் பயன் இல்லாவிட்டாலும், சிறிய அளவு கூட தொல்லை இருந்ததில்லை.ஆனால் அமைப்புகள் களத்தில் குதித்த பிறகு சஹர் நேரத்தின் கண்ணியத்திற்கு களங்கம் நேர்ந்து விட்டது. மார்க்க ரீதியான பிரச்சனைகளைக் கிளறி, கருத்து மோதல்களைச் செய்வதற்கான களமாக சஹர் நேரத்தையும், ஊடகத்தையும் மாற்றி விட்டார்கள்.
இறைவனுக்கு உருவம் இருக்கிறதா இல்லையா என்றொரு சண்டை.
காதியானிகள் முஸ்லிமா இல்லையா என்று, ரொம்ப அவசியமான ஒரு விவாதம்.
சமுதாயத்திற்கு யார் உண்மையாக உழைப்பது என்பதை எடுத்துச் சொல்வதில் 'நீயா நானா' போட்டி.
இட ஒதுக்கீடு உரிமையைப் பெற்றுத் தந்தது யார் என்பதில் நீடிக்கும் உரிமைப் போர்.
'அவன் முஸ்லிம் இல்லை, இவன் முஸ்லிம் இல்லை' என்றெல்லாம் சகட்டுமேனிக்கு சான்றிதழ் கொடுக்கும் கொடுமை.
ஜகாத்தையும், நன்கொடைகளையும் எங்களுக்கே அனுப்புங்கள்! அனுப்புங்கள்! என்று கூவிக் கூவி வசூலிக்கும் அவலம்.....
இப்படி நீண்டு கொண்டிருக்கிறது முஸ்லிம் ஊடகத்தின் பரிணாமம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம், மார்க்கம் பேச வேண்டியவர்கள் அரசியல் பேசுகிறார்கள்.
அரசியல் பேச வேண்டியவர்கள் மார்க்கம் பேசுகிறார்கள்.
எதையாவது பேச வேண்டும் என்பதில் இருக்கும் முனைப்பும் வேகமும் எதைப் பேச வேண்டும் என்பதில் இருப்பதில்லை.
பிஜேயின் மார்க்கப் பிரச்சாரம் தான் தமுமுகவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது என்று சொல்லி முழு நேர அரசியல் பேச வந்தவர்கள், அரசியலை விட்டு விட்டு மார்க்கம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
முஸ்லிம்களிடம் கருத்துருவாக்கம் செய்யக் கூடிய வாய்ப்பு மிகுந்த ஒரு நேரத்தில், வலிமை மிகுந்த ஒரு ஊடகத்தின் மூலம் சமூக மறுமலர்ச்சிக்குத் தேவையான கருத்துக்களை எடுத்து வைத்து மக்களை ஈர்ப்பதை விட்டு விட்டு 'ஏய்..! நானும் ரவுடிதான்; நானும் ரவுடி தான்' என்பது போல மார்க்கப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஊடகத்தின் வழியே யாருமே மார்க்கப் பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதல்ல நமது கருத்து.
அரசியல் எழுச்சியூட்ட வேண்டியவர்கள் ஊடகத்தை அதற்கு முழுமையாகப் பயன்படுத்தட்டும்,
மார்க்க விழிப்புணர்வூட்ட வேண்டியவர்கள் முழுமையாக மார்க்கப் பிரச்சாரம் செய்யட்டும்.
ஒரே வேலையை எல்லோரும் செய்து கொண்டிருப்பதனால் தான் நம்மில் துறை சார்ந்த வல்லுனர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
பிஜே மார்க்கப் பிரச்சாரம் செய்வதால் நானும் மார்க்கப் பிரச்சாரம் செய்வேன் என்று வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் குதித்தால், அரசியல் விழிப்புணர்வை யார் ஊட்டுவது?
ஒரே வேலையை எல்லோரும் செய்து கொண்டிருப்பதனால் தான் இங்கே சமுதாயத்தின் பிரச்சனைகள் தீர்வின்றித் தொடர்கின்றன.அவரவர் கடமைகளில் இருந்து அவரவர் தவறுவதன் மூலம் சமுதாய மக்களின் பொருளாதாரமும்,
பொன்னான நேரமும் தான் வீணாகிக் கொண்டிருக்கிறது.
முஸ்லிம்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரி என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நடைமுறையில் நாம் மற்றவர்களிடம் இருந்து நிறைய பாடம் படிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
இன்றைக்கு இந்தியா முழுவதும் எல்லா துறைகளிலும் வேர் பரப்பி, கிளை விரித்து, கோலோச்சி இருக்கிற இந்துத்துவ சக்திகள் ஒருபோதும் தங்களின் ஆற்றலை வீணாக்குவதில்லை. ஒரே வேலையை செய்வதற்காக அவர்கள் தங்கள் சமூகத்தின் பொருளாதாரத்தை விரயம் செய்வதில்லை.
அங்கே பாஜகவுக்கு ஒரு வேலை;பஜ்ரங் தளத்துக்கு ஒரு வேலை;விசுவ ஹிந்து பரிசத்துக்கு ஒரு வேலை;துர்கா வாகினிக்கு ஒரு வேலை;அபினவ் பாரத்துக்கு ஒரு வேலை;இந்து முன்னணிக்கு ஒரு வேலை..இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலைகள்.இவர்களையெல்லாம் கட்டி மேய்க்கிற பெரியண்ணன் வேலை ஆர்.எஸ்.எஸ்ஸின் வேலை.
இவர்களில் எந்த அமைப்பும் இன்னொரு அமைப்பைத் தாக்குவதில்லை.தொலைக்காட்சியில் Slot எடுத்து சண்டை போடுவதில்லை. பாபர் மசூதியை இடித்தது நீயா நானா என்று ஒருவருக்கொருவர் மல்லுக்கு நிற்பதில்லை. ஒரு அமைப்பின் வேலையில் இன்னொரு அமைப்பு தலையிடுவதில்லை.ஒரு அமைப்பின் வேலையை இன்னொரு அமைப்பு செய்வதுமில்லை.
ஒவ்வொருவருக்கும் தனித் தனி வேலைகள். ஒவ்வொருவருக்கும் தனித் தனிப் பாதைகள்.ஆனால் எல்லோருக்கும் ஒரே இலக்குகள். ஆர்எஸ்எஸ் என்கிற தலைமை அமைப்புக்கு கட்டுப்பட்டவர்களாக,அது போட்டுக் கொடுத்த செயல் திட்டத்தின் படி வழி நடப்பவர்களாக இந்துத்துவ சக்திகள் இயங்கி வருவதை நாம் கண் கூடாக கண்டு வருகிறோம்..
குர்ஆனும், ஹதீசும் இல்லாமல், முறையான வாழ்க்கைத் திட்டம் இல்லாமல், ஒருமுகப்பட்ட நல்ல கோட்பாடு இல்லாமல் அவர்கள் முறையாகவும் தெளிவாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் நாம் எல்லாம் இருந்தும் இலக்கற்றுத் தடுமாறிக் கொண்டிருக்கிறோம்.
எந்த வித திட்டமிடலும் இல்லாமல், தெளிவான வழிமுறைகளைக் கையாளாமல் அமைப்பு நடத்துவது போலவே இங்கே ஊடகமும் நடத்தப்பட்டு வருகிறது. பாபர் மஸ்ஜித் மீட்புப் போராட்டம், இட ஒதுக்கீடு கேட்டுப் போராட்டம் என ஒரே விசயத்தைப் பேசுவதற்கு பல அமைப்புகள் இயங்குவது போல, பல்வேறு அமைப்புகளும் தொலைக்காட்சியில் Slot வாங்கி ஒரே விசயத்தைப் பேசுகின்றன.
கையில் ரிமோட்டை வைத்துக் கொண்டு தொலைக்காட்சியின் முன் அமருகின்ற முஸ்லிம் சமூகத்திற்கு, எந்த நிகழ்ச்சியைப் பார்ப்பது, எந்தக் கருத்தைக் கேட்பது என்ற குழப்பம் நாளுக்குநாள் வலுத்து வருகிறது.
மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவும்,உறங்கிக் கொண்டிருக்கும் சமூகத்தை தட்டி எழுப்பவும்,அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசவுமே ஊடகம் பயன்பட வேண்டும்.ஆனால் முஸ்லிம் ஊடகத்தின் மூலம் இன்று சமுதாயத்தில் குழப்பமும் பிரச்சனைகளும் தான் மலிந்து கொண்டிருக்கிறது.
குஜராத் இனப்படுகொலைகளை நிகழ்த்தியது எப்படி என்று, இந்துத்துவ பயங்கரவாதிகளைப் பேச வைத்து பதிவு செய்த தெஹல்காவின் அரும்பணியை நாம் மெச்சிக் கொண்டிருக்கிறோம்.
காசு வாங்கிக் கொண்டு கலவரம் செய்யும் ஸ்ரீ ராம் சேனாவின் பிரமோத் முத்தலிக்கை, கையும் களவுமாக காட்டிக் கொடுத்த ஊடகத்தின் மேன்மையை நாம் புகழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நாடு முழுவதும் நடை பெற்ற ஏழு மிகப்பெரிய குண்டு வெடிப்புகளில் ஆர் எஸ் எஸ்ஸுக்கு தொடர்பு உண்டு என்று பகிரங்கமாக அம்பலப் படுத்திய ஹெட்லைன்ஸ் டுடேயின் கேமராவை நாம் போற்றிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், நமது கைகளில் இருக்கும் கேமராக்கள், என்றைக்காவது நம் பிரச்சனைகளைப் படம் பிடித்துக் காட்டியதுண்டா?
சுய பரிசோதனை செய்யும் வகையில் ஒவ்வொரு முஸ்லிம் ஊடக நிறுவனங்களும் தங்களுக்குள் இந்தக் கேள்வியை எழுப்பிப் பாருங்கள்; வெட்கத்தால் தலை குனிவீர்கள்.
மார்க்க ரீதியான கருத்து முரண்பாடுகளையும், மசாயில் பிரச்சனைகளையும் எப்போதும் படம் பிடித்துக் கொண்டு ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் நம் கேமரா, ஏன் அபகரிக்கப்பட்ட வக்பு நிலங்களைப் படம் பிடிக்கவில்லை?
கோடான கோடி ரூபாய் மதிப்புள்ள வக்புச் சொத்துக்களை ஆக்கிரமித்து வைத்துள்ள அரசியல்வாதிகளையும், தொழில் அதிபர்களையும், நிறுவனங்களையும், தனி நபர்களையும் கையும் களவுமாகப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் புலனாய்வு வேலையை ஏன் நமது ஊடகம் செய்யவில்லை?
இஸ்லாத்திற்கு வந்த பேராசிரியர் பெரியார் தாசனை போட்டி போட்டுக் கொண்டு படம் பிடிக்கவும், பேட்டி எடுக்கவும் முனைப்பு காட்டுகின்ற நமது ஊடகம், 25 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாத்திற்கு வந்த அப்துல்லாஹ் அடியாரின் இறுதி நாட்கள் வறுமை நிறைந்ததாக முடிவுக்கு வந்ததைப் பற்றி என்றைக்காவது பேசி இருக்கிறதா?
இருபது ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாத்திற்கு வந்த கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் இப்போது எப்படி இருக்கிறார் என்று எப்போதாவது திரும்பிப் பார்த்திருக்கிறோமா? இப்போதும் மொழிப் போராட்ட தியாகிகளுக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தும் அவரது இன்றைய நிலையை சமூகத்தின் பார்வைக்கு எடுத்துச் சென்றிருக்கிறோமா?
கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை தழுவும் பல்வேறு கிராமங்களில் ஒரு பள்ளிவாசல் கூட கட்ட முடியாமல், இஸ்லாமியக் கருத்தியலை கற்றுக்கொள்ளும் மையம் ஒன்றை நிறுவ முடியாமல், அழைப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் கடும் நெருக்கடியில் சிக்கி உழல்வதை நமது ஊடகங்கள் ஏன் படம் பிடிக்கவில்லை?
பெரியார் தாசனை வாழ்த்த வந்த திருமாவளவன் எப்போது இஸ்லாத்திற்கு வருவார் என்று துரத்தித் துரத்தி கேள்வி எழுப்பி, அதை ஊடகங்களில் ஒளிபரப்பி, சமுதாய மக்களிடம் எதிர்பார்ப்பை கிளறி விட்டவர்களே...சென்னை கொருக்குப்பேட்டையில் வறுமையின் காரணமாக ஆறு முஸ்லிம் குடும்பங்கள் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிச் சென்ற அவலம் நடந்துள்ளதே..அதைப் பற்றியும் கொஞ்சம் பேசுவீர்களா?
சிறுபான்மையினருக்கான பிரதமரின் 15 அம்சத் திட்டம் பற்றி முஸ்லிம் இதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரப் படுத்தினோம்.
முஸ்லிம்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக வங்கிக் கடன் வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்று எழுதினோம்.
ஆனால் நடைமுறையில், தொழில் தொடங்க கடன் கேட்டு வங்கிகளுக்கு நடையாய் நடக்கும் முஸ்லிம் இளைஞர்களை, வங்கி அதிகாரிகள் அலட்சியப் படுத்தி திருப்பி அனுப்புவதையும், வேறு வழியே இல்லாமல் வட்டிக்கு வாங்கி வியாபாரம் செய்து வாழ்க்கையை ஓட்டும் நமது சமுதாய இளைஞர்களின் அவலங்களையும் என்றைக்காவது நாம் அம்பலப்படுத்தி இருக்கிறோமா? நமது ஊடக நிகழ்ச்சிகளில் இதையெல்லாம் விவாதப் பொருளாக்கி, பாதிக்கப்பட்டவர்களை பேட்டி எடுத்திருக்கிறோமா? சம்மந்தப் பட்ட அதிகாரிகளை அணுகி கேள்வி எழுப்பி இருக்கிறோமா?
பாதிக்கப் பட்ட இளைஞர் தன் பெற்றோருடன் சென்று வங்கி அதிகாரியை நோக்கி கேள்வி எழுப்புவதை விட, பத்து பேராகத் திரண்டு போய் வங்கியை முற்றுகை இடுவதை விட, ஒரு கேமராவை தூக்கிக் கொண்டு ஒரே ஒரு நபர் சென்றால் போதுமே! மறு நொடியே பிரச்சனைக்கு தீர்வு வந்து விடுமே. அதை ஏன் இதுவரை நமது கேமரா செய்யவில்லை?
வறுமையின் கோரப்பிடியில் சிக்கி, அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பாதை மாறி, இன்றைக்கு சினிமா துணை நடிகைகளாகவும், விபசாரத்தில் ஈடு படுபவர்களாகவும் ஏராளமான முஸ்லிம் பெண்கள் இருப்பதை ஏன் நமது ஊடக அறிவு கண்டறியவில்லை?
இலங்கையில் இருக்கும் மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளைப் படம்பிடித்து, தமிழ்நாட்டில் ஒளிபரப்பத் தெரிந்த நமது கேமராவுக்கு, இலங்கை முஸ்லிம்களின் அகதிமுகாம் வாழ்கையை ஆய்வு செய்யச் சென்ற பேராசிரியர் அ.மார்க்சுடன் பயணித்து அங்குள்ள அவல நிலைகளைப் படம் பிடித்து வந்து ஒளிபரப்ப மனம் வரவில்லையே ஏன்?
தமது இயக்கத்தின் சார்பில் செய்யப்படும் பித்ரா வினியோகத்தையும்,இரத்த தானத்தையும், மருத்துவ முகாம்களையும் மறவாமல் படம் பிடித்து ஆவணப்படுத்தி, அதை சமுதாய மக்களுக்கு காட்சிப் படுத்துவதில் இருக்கும் வேகத்தில் துளியளவாவது , முஸ்லிம் ஆளுமைகளின் சாதனை வாழ்க்கையை ஆவணப்படுத்துவதிலும், முஸ்லிம்கள் குறித்த வரலாற்றுப் படங்களை உருவாக்குவதிலும், இருந்திருக்க வேண்டாமா? அப்படி ஆவணப்படுத்தி இருந்தால், இன்றைய தலைமுறையினர் காயிதே மில்லத்தைப் பார்த்து நாகூர் ஹனிபா என்று சொல்லும் அவலம் நேர்ந்திருக்குமா?
முஸ்லிம்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் ஒடுக்கு முறைகளை அம்பலப்படுத்தும் வகையில் அண்மையில் கீற்று இணையதளம் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. காவல்துறையின் அடக்குமுறைக்கு இலக்கான முஸ்லிம்கள் பலர் அந்நிகழ்ச்சியில் தோன்றி தங்களின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்தனர்.கீற்று நடத்திய அந்நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இப்படி புதிய கோணத்தில் நமது பிரச்சனைகளை விவாதப்பொருளாக்கும் வேலையை எப்போதாவது நமது ஊடகங்கள் செய்திருக்கிறதா?
கீற்றுக்கு இருக்கிற அக்கறை ஏன் 'மூன்' டிவிக்கு இல்லை?
ஏன் அது போன்ற ஒரு நிகழ்ச்சியை டி.என்.டி.ஜே மீடியா விஷன் செய்யவில்லை?
எந்நேரமும் பிஜேயுடன் வம்பு வளர்ப்பதையே முழு நேரச் செயல்திட்டமாகக் கொண்டு இயங்கும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியின், ஆஷிக் மதீனா மீடியா நெட்வொர்க் ஏன் இது பற்றி சிந்திக்கவில்லை?
இப்படிப் பேசுவதற்கும்,விவாதிப்பதற்கும்,காட்சிப் படுத்துவதற்கும் ஆயிரம் அவலங்கள் குவிந்து கிடக்கின்றன.ஆனால் இவை குறித்தெல்லாம் எந்தச் சிந்தனையும் இன்றி முஸ்லிம் ஊடகம் பொறுப்பற்று இயங்கிக் கொண்டிருக்கிறது.
சமுதாயத்திற்குப் பயனுள்ள விசயங்களை காட்சிப் படுத்துவதை விட்டு விட்டு, நான்கு பணக்காரர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு,அவர்களைப் பேச வைத்துப் படம் பிடித்து, அதையே ஒரு நிகழ்ச்சியாக்கி ஒளிபரப்பக் கூடிய தரகு வேலைதானே, இன்றைக்கு முஸ்லிம் ஊடக சேவையாக இருக்கிறது?
நபிகளார் வலியுறுத்திய பண்புகள் எவற்றையும் நடைமுறை வாழ்வில் கடைப்பிடிக்காதவர்கள் எல்லாம்..தொலைக்காட்சியில் தோன்றி 'ரசூலுல்லாஹ் அப்படிச் சொன்னார்கள்,ரசூலுல்லாஹ் இப்படிச் சொன்னார்கள்' என்று சமுதாயத்திற்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது என்றெல்லாம் பகுத்துப் பார்க்கத் தெரியாமல் எல்லோருக்கும் வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது இந்தச் சமூகம்.
மார்க்கம் பேசினால் தான் வசூலாகும் என்ற நிலை தொடர்வதனால் தான், மற்ற எல்லாப் பிரச்சனைகளையும் விட்டு விட்டு இங்கே எல்லோரும் மார்க்கம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அறிவியலைப் பற்றியும்,வரலாற்றைப் பற்றியும்,கலைகளைப் பற்றியும்,இலக்கியத்தைப் பற்றியும்,அரசியலைப் பற்றியும்,பொருளாதாரத்தைப் பற்றியும், பண்பாட்டைப் பற்றியும் பேசுவதற்கும், விவாதிப்பதற்கும்,உரையாடுவதற்கும்,நல்ல தீர்வுகளை நோக்கி நகருவதற்கும் யாருமே முன்வருவதில்லை.
அப்படி யாராவது முன்வந்தாலும் அவர்களுக்கு போதிய ஆதரவு கிடைப்பதில்லை.
மார்க்கம் பேசுகிறவர்களுக்கு மட்டுமே பொருளாதாரத்தை வாரி வழங்கும் சமூகப் புரவலர்கள், மற்ற விசயங்களைப் பற்றியும் பேசுவதற்கு ஆதரவு அளிக்க வேண்டாமா?
பொதுவான தொலைகாட்சி நிகழ்சிகளுக்கு விளம்பரம் தரக்கூடிய வர்த்தக நிறுவனங்கள்,கண்டபடி எல்லோருக்கும் விளம்பரங்களைக் கொடுப்பதில்லை. எந்த நிகழ்ச்சியை மக்கள் அதிகம் ரசிக்கிறார்கள்,எந்த நிகழ்ச்சிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது,எந்த நிகழ்ச்சி அதிகமான வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதையெல்லாம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் 'டி.ஆர்.பி. ரேட்டிங்' என்னும் தரவரிசைப் பட்டியலைப் பார்த்து, அதில் சிறந்த இடத்தில் இருக்கும் நிகழ்ச்சிகளுக்கே விளம்பரம் தருகிறார்கள்.
ஆனால் முஸ்லிம் ஊடக நிகழ்ச்சிகளை கண்காணிப்பதற்கும், தரவரிசைப் படுத்துவதற்கும் ஆளுமில்லை, அமைப்புமில்லை.
முஸ்லிம் நிகழ்சிகளுக்கு விளம்பரங்களைத் தரக்கூடிய நிறுவனங்களுக்கு அதைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை.
இங்கே நிகழ்ச்சிக்காக விளம்பரம் கொடுக்கிறார்கள் என்பதை விட, நிகழ்ச்சியை நடத்தும் நபருக்காகவும், அமைப்புக்காகவுமே விளம்பரம் கொடுக்கிறார்கள். அதனால் தான் வித்தியாசமான நிகழ்ச்சியை நடத்துகிறவர்களுக்கும்,வெறுமனே உரை நிகழ்த்திக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரே விதமான பொருளாதார உதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது.
ஸஹர் நிகழ்ச்சிகளை தவிர்ப்பதே நல்லது. "ஸஹர் நேர உணவில் பரக்கத்(அபிவிருத்தி) உள்ளது" என்று இருக்கும்பொழுது, அந்த நேரத்தில் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு உணவருந்துவதால் நம்மால் எப்படி இறைவன் தரும் பரக்கத்தைப் பெறமுடியும்? அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ஐந்து மணி வரை தொடர்வதால் ஃபஜர் தொழுகையை கூட்டாக தொழும் வாய்ப்பும் தவறிவிடுகிறதே? இதை பற்றியெல்லாம் மார்க்கம் பேசும் தலைவர்கள் சிந்திக்கமாட்டார்களா?

6/22/2014 07:38:00 PM | 0 நல்ல கருத்துரைவழங்கியோர்: | Read More

ரமளானுக்கு தயாராவோமே!

ஒன்றுக்கு பலமடங்கு நன்மைகளை அள்ளித் தரும் புனிதமிக்க ர‌மளான் மாதம் நம்மை நெருங்கிவிட்ட நிலையில் அந்த ரமளானின் மகத்தான நாட்களை நாம் மறுமைக்கு பயனுள்ள வகையில் அமைத்துக் கொள்ள இப்போதே நாம் தயாராக‌வேண்டும்.
குறிப்பாக குடும்பத் தலைவிகளாகிய பெண்கள் மற்ற நாட்களைவிட ரமளானில் செய்யவேண்டிய அமல்களையும், தவிர்ந்துக் கொள்ள வேண்டியவற்றையும், வீட்டு வேலைகளை எவ்வாறு குறைத்துக் கொள்வது என்பது பற்றியும் சில டிப்ஸ்களை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்.
ரமளானுக்கு முன்னால் செய்யவேண்டிய....
ஸ்டோரேஜ் & க்ளீனிங் டிப்ஸ்:
o  நம் வீடுகளை எப்போதும்தான் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்திருக்கிறோமே என்று அலட்சியமாக இல்லாமல், ரமலானுக்கு முன்பு கொஞ்சம் ஸ்பெஷலாக எல்லாவற்றையும் ஒருகைப் பார்த்து வைத்துவிட்டால் அந்த ஒரு மாத காலத்தில் வேலைச்சுமை நிச்சயம் குறையும்.
o  எப்போதாவது எடுத்து பயன்படுத்தும் பொருட்களை எடுத்து தூசுகளின்றி சுத்தப்படுத்தி ப்ளாஸ்டிக் கவர் அல்லது கேரி பேக்கினால் மூடி வைத்தால் ரமலானில் தேவைப்படும்போது அந்தப் பொருட்களை எடுத்தவுடன் சுலபமாக பயன்படுத்தலாம்.
o  பழைய துணிமணிகளை தனியாக எடுத்துவிட்டு, பயன்படுத்தும் துணிகளை மட்டும் தனித்தனி வகைகளாக பிரித்து நேர்த்தியாக அடுக்கி வைத்துக் கொண்டால் அவசர நேரத்தில்கூட‌ தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. தனியாக பிரித்து வைத்த பழைய துணிகளை ஏழை எளியவர்கள் கேட்டு வரும்போது உடனுக்குடன் கொடுக்கவும் வசதியாக இருக்கும். (இது இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டும்.)
o  வாரம் ஒருமுறை துவைக்கும் பெட்ஷீட் செட்கள், முஸல்லா, போர்வைகளாக‌ இருந்தாலும் 4, 5 செட்களை முன்பே துவைத்து வைத்துக் கொள்ளலாம். தினமும் இரவுத் தொழுகைக்கு செல்லத் தேவையான (ஒன்றுக்கு மேற்பட்ட ) ஃபர்தா செட்களையும் ரெடி பண்ணி வைத்துக் கொள்வது நல்லது.
o  ஃபிரிஜ்ஜில் உள்ள பொருட்களை எடுத்துவிட்டு, சமையல் சோடா (சோடாப்பு) கலந்த நீரினை பழைய துணி அல்லது ஸ்பாஞ்சினால் தொட்டு உள்பக்கம் முழுதும் துடைத்துவிட்டு, மீண்டும் பொருட்களை அடுக்கி வைத்தால் ஃபிரிஜ் எந்த வாசனையுமின்றி ஃப்ரெஷ்ஷாக இருக்கும். ஃப்ரீஸரையும் அதுபோல் சுத்தப்படுத்தி கடல் உணவுகள், கறி வகைகள், காய்கறி/கீரைகள், பேஸ்ட் வகைகள் என தனித்தனியாக அடுக்கி வைத்துக் கொண்டால் தேவைப்படும்போது தேடாமல் எடுக்கலாம்.
o  பெருநாள் புத்தாடைகள் வாங்க‌ ரமளான் தள்ளுபடி விற்பனைக்காக காத்திருந்துவிட்டு கடைசிப் பத்து நாட்களில் கடைத் தெருவில் நேரத்தை வீணாக்காமல், கூடுமானவரை உங்களுக்குத் தேவையான புத்தாடைகளை முன்பே வாங்கி/தைத்து வைத்துக் கொள்வது நல்லது. அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் மட்டும், (கடை கடையாக அலையாமல்) ஒரு இடத்தில் வாங்கினோமா, வந்தோமா என்று ஷாப்பிங்கை விரைவில் முடித்துவிட்டு வந்துவிட்டால் ரமலானின் பொன்னான பொழுதுகள் வீணா
o  நீண்ட நாட்கள் சேமித்தாலும் வீணாகாத பொருட்களான சோப்பு, ஷாம்பு, சோப்புத்தூள், க்ளீனிங் லிக்யுவிட் வகைகளை ஒரு மாத தேவைக்கும் கூடுதலாக ரமலானுக்கு முன்பே வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.காது.
சமையல் தயாரிப்பு டிப்ஸ்:
o  முக்கியமாக... சமையலை முன்பே முடிவு செய்துக் கொண்டு, அதற்காகவே நேரத்தை அதிகமாக செலவழிக்காத வண்ணம் திட்டமிட்டுக் கொள்ளவேண்டும்.
o  சமையலுக்கு தேவைப்படும் மசாலா, மளிகை வகைகளை மொத்தமாக வாங்கி சேமித்துவைத்துக் கொள்ளலாம். நாமே தயாரிக்கும் மசாலாக்களுக்கான பொருட்களை முற்கூட்டியே வாங்கி, சுத்தப்படுத்தி மிஷினில் கொடுத்தோ, மிக்ஸியிலோ அரைத்தோ வைத்துக் கொள்ளலாம்.
o  மல்லி, புதினா, சோற்று இலை (டவுன் பாண்டான் இலை) போன்று அடிக்கடி பயன்படுத்துபவற்றையும், நீண்ட நேரம் உட்கார்ந்து கவனமாக சுத்தம் செய்யும் முருங்கைக் கீரை போன்ற கீரை வகைகளையும் முன்கூட்டியே வாங்கி சுத்தம் செய்து தண்ணீர் படாமல் ஃப்ரீஜரில் எடுத்து வைத்துக் கொண்டால், அவ்வப்போது பயன்படுத்த மிகவும் வசதியாக இருக்கும். (குறிப்பு: இதுபோன்று தயார்படுத்தி வைத்த‌வற்றை பயன்படுத்தும் சமயம் நீண்ட நேரம் எடுத்து வெளியில் வைக்கக் கூடாது. எடுத்தவுடனே கழுவி, உடனே பயன்படுத்திவிடவேண்டும்.)
o  வாழைப்பூவைக்கூட இந்த முறையில் செய்து வைக்கலாம். ஆனால் உப்பு நீரில் சிறிது போட்டு, பிறகு தண்ணீரை வடியவிட்டு எடுத்து வைக்கவேண்டும். இதை எடுத்தவுடன் அப்படியே பயன்படுத்தலாம். காளிஃபிளவர், காளான் போன்ற காய்கறி வகைகளையும் சுத்தப்படுத்தி, நறுக்கி வைத்துக் கொள்ளலாம்.
o  எப்போதும் பயன்படுத்தும் பாத்திரங்களைவிட சில ஸ்பெஷல் பாத்திரங்கள் ரமலானில் தேவைப்படலாம். அதுபோன்ற பிரத்யேக பொருட்களை எடுத்து பயன்படுத்துபோது அதிகம் தேவைப்படாத மற்ற பொருட்களை எடுத்து உள்ளே வைத்துவிடலாம். பாத்திரம் கழுவ அதிகமாக சேர்ந்து போகாமல் இருக்கும்.
o  இஞ்சி பூண்டு விழுதினை அவரவர் குடும்ப செலவினத்திற்கேற்ற அளவில் கூடுதலாக‌ அரைத்து, அத்துடன் அரைக்கும்போதே சிறிது எண்ணெய் கலந்து கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக் கொண்டால் மிகவும் உபயோகமாக இருக்கும். (குறிப்பு: இஞ்சி பூண்டு விழுதை கண்ணாடி பாட்டிலில் மட்டும்தான் சேமிக்கவேண்டும். ப்ளாஸ்டிக், மற்றும் உலோகப் பொருட்களில் சேமித்து வைப்பது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.)
o  ரமளானில் இஃப்தார் (நோன்பு திறக்கும்) சமயத்தில் மிக முக்கிய உணவாக இடம்பெறுவது நோன்புக் கஞ்சிதான். இது சத்தானதாகவும், மிகவும் சுலபமாக செரிமாணமாகக் கூடியதாகவும் இருப்பதால் அநேகமான நாடுகளில் (அந்தந்த நாட்டு உணவு முறைகளுக்கேற்ப) கஞ்சியை தயார் பண்ணிக் கொள்கிறார்கள். இதை தயாரிக்க‌ சற்று கூடுதல் நேரமாகும் என்பதால் 3 நாட்களுக்கு ஒருமுறை தயாரித்து, பால் வகைகள் மட்டும் சேர்க்காமல் ஃபிரிஜ்ஜில் வைத்துக் கொண்டால் நேரம் மிச்சமாகும். (குறிப்பு: மறுநாள் தேவைக்குரியதை மட்டும் எடுத்து தண்ணீரும் பாலும் கலந்து கொதிக்க வைத்து, கட்டியில்லாமல் கலக்கி வைத்துக் கொண்டால் புதிய கஞ்சிபோல் ஃபிரஷ்ஷாக இருக்கும்.)
o  கஞ்சிக்கு தேவையான வெந்தயம், கடலை அல்லது பருப்பு வகைகளை (ஒரு வாரத்திற்கு தேவையான அளவினை) தனித்தனி பாட்டில்களில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து ஃபிரிஜ்ஜில் வைத்துக் கொண்டால், பயன்படுத்த வசதியாக இருக்கும். அவை தீர்ந்த பிறகு மீண்டும் அதுபோல் ஊறவைத்துக் கொள்ளலாம். (குறிப்பு: அதுபோல் பயன்படுத்தும்போது ஊறிய தண்ணீருடன் கலக்கி எடுத்து பயன்படுத்தவேண்டும். தண்ணீரை கீழே ஊற்றக்கூடாது.)
o  கறி வகைகளை தினமும் சென்று வாங்கிக் கொண்டிருக்காமல், கொஞ்சம் கூடுதலாக வாங்கி சுத்தப்படுத்தி, தேவைக்கேற்ப தனித்தனி பாக்கெட்களில் போட்டு ஃப்ரீஜரில் (வாரம் ஒருமுறை) ஸ்டோர் பண்ணிக் கொள்ளலாம். வெளிநாடுகளில் வசிப்போர் மொத்தமாக ஒரு மாதத்துக்கும் சேர்த்து வாங்கும் வாய்ப்புகள் இருப்பதால் அதுவே நல்லது. அதன்மூலம் அலைச்சலைக் குறைத்து நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
o  சமோசா, நேம், ஸ்பிரிங் ரோல் வகைகளை இப்போதே தயாரித்து, ஃப்ரோஜன் பேக் அல்லது ப்ளாஸ்டிக் பாக்ஸ்களில் அடுக்கி ஃபிரீஜரில் வைத்துக் கொள்ளலாம். (குறிப்பு: ஒவ்வொரு லேயருக்கிடையிலும் Cling Film (ப்ளாஸ்டிக் ராப்) போட்டுக் கொண்டால் ஒன்றுக்கொன்று ஒட்டிக்கொள்ளாமல் இருக்கும்.)
o  எலுமிச்சைப் பழங்களைப் பிழிந்து சாறு எடுத்து, அத்துடன் ஐஸிங் சுகர் சேர்த்து நன்கு கரைத்து ஐஸ் க்யூப் ட்ரேக்களில் ஊற்றி ஃப்ரீஜ் செய்து, உறைந்த பிறகு எடுத்து ஒரு பாக்ஸில் போட்டு ஃப்ரீஜரில் வைத்துக் கொண்டால் லெமன் ஜூஸ் கரைக்கும்போது 3/4 க்ளாஸ் தண்ணீரில் ஒரு கட்டி ஜூஸ் (அல்லது உங்கள் சுவைக்கேற்ப ) கலந்துக் கொண்டால் (Preservative கலக்காத) ஃப்ரெஷ் லெமன் ஜூஸ் ரெடி!
o  தேங்காயைக் கூடுதலாக அரைத்து ஐஸ் க்யூப் ட்ரேக்களில் நிரப்பி, உறைந்த பிறகு எடுத்து ஃப்ரோஜன் பேக்கில் போட்டு வைத்துக் கொண்டால் அவ்வப்போது பயன்படுத்த மிகவும் வசதியாக இருக்கும். (இந்தியாவில் உள்ளவர்கள்) அதுபோல் தேங்காய் பாலையும் தயார் பண்ணி வைக்கலாம். தேங்காயைத் துருவியும் சிறு சிறு பாக்கெட்களில் போட்டு வைத்துக் கொண்டால் தேவைக்கு ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம்.
o  பழவகைகளை வெட்டி ஃப்ரீஜரில் வைத்துக் கொண்டால் உடனுக்குடன் ஃப்ரூட் சாலட், ஃப்ரூட் ட்ரை ஃபில் போன்றவை செய்ய உதவியாக இருக்கும். (குறிப்பு: அப்படி உறைய வைக்கும் பழங்களை முன்கூட்டியே வெளியில் எடுத்து வைக்கக் கூடாது. தண்ணீர் விட்டுப் போய்விடும். அதனால் தயார் பண்ணி சுமார் 1/2 மணி நேரத்தில் சாப்பிடும்படி இருக்கவேண்டும்)
o  ஸஹர் உணவுகளை நோன்பு திறக்கும் முன்பே தயார் செய்துவிட்டால் இரவுத் தொழுகைக்கு சரியான நேரத்தில் செல்லவும், ஸஹருக்குரிய நேரத்தில் அசதியின்றி சுறுசுறுப்பாக எழவும் வசதியாக இருக்கும். சமையலறையில் அதிகமான நேரத்தை செலவிடாமல் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளுக்கான உணவுளையும் தயாரித்துவிடும்போது, மீதியுள்ள இரவு நேரங்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட நிறைய நேரம் கிடைக்கும்.
o  ஒரே நாளில் பலவகை உணவுகளை தயாரிப்பதை தவிர்ந்துக் கொள்ள வேண்டும். அதனால் சமையலுக்கான நேரம் மிகுதியாக செலவாவதைத் தவிர்க்கலாம்.
ஆரோக்கிய டிப்ஸ்:
o  உஷ்ணமான நாடுகளில் வசிப்போர் குளிர்ச்சி தரும் பொருட்களான பாதாம் பிசின், சப்ஜா விதைகள், நன்னாரி, கடல்பாசி, பனை நுங்கு போன்றவற்றை ஷர்பத்தாக செய்து அருந்த‌லாம். மற்றும் பழ வகைகள், பழ ஜூஸ்கள், மில்க் ஷேக் போன்ற ஏதாவது ஒன்றை இஃப்தார் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
o  ஸஹர் உணவுடனோ/உணவுக்குப் பிறகோ கெட்டித் தயிர் 1 கப் சுமார் (200 மில்லி) அளவு சாப்பிட்டால், இரவு கண் விழிப்பதாலும் சீதோஷ்ண நிலைகளாலும் ஏற்படும் உஷ்ணத்தை வெகுவாகக் குறைக்கும். உணவுண்ட பிறகு சாப்பிடுவது அல்சர், நெஞ்சு எரிச்சல் உள்ளவர்களுக்கு அருமருந்தாகும்.
o  குளிர்ச்சி தரும் பழங்களான தர்பூசணி, பன்னீர் திராட்சை, மங்குஸ்தான் பழம், ஆரஞ்சு, ஆத்தாப் பழம், ரம்புதான் பழம், செவ்வாழை இதுபோன்ற வகைகளில் எது கிடைக்கிறதோ அவற்றை இஃப்தார் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வெள்ளரிப் பிஞ்சு சாலட் செய்தும் சாப்பிடலாம்.
o  ஸஹர் உணவில் கடல் உணவுகளான மீன், இறால் சமைப்பவர்கள் 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொண்டால் ஸ்மெல் இருக்காது. அத்துடன் புளிக்கு பதிலாக எலுமிச்சைச் சாறு சேர்ப்பது நல்லது.
o  நிறைந்த சத்துக்களைத் தரக்கூடிய பேரீத்த பழங்களை இஃப்தாரின்போது முடிந்தவரை கண்டிப்பாக சேர்த்துக் கொள்வது நல்லது.
o  எண்ணெயில் முக்கிப் பொரிக்கும் (Deep Fry) வகை உணவுகளைக் குறைத்துக் கொண்டு அவித்த உணவுகள், கஞ்சி வகைகள் மற்றும் பழங்களை தேவைக்கு தகுந்த விகிதத்தில் சாப்பிடலாம்.
o  சஹர் நேர உணவுகளை மசாலா, எண்ணெய், நெய், காரம், புளிப்பு போன்றவை அதிகம் சேர்க்காத வகையிலும், முடிந்தவரை குறைவாகவும் சாப்பிடுவது நல்லது.
o  நோன்பு வைத்தால் விடிந்தபிறகு சிலருக்கு தலைவலி வந்துவிடும். அவர்கள் ஸஹர் உணவுக்குப் பின் ஒரு கப் சூடான டீ (பால் கலந்தோ/கலக்காமலோ) அருந்தினால் தலைவலி பெரும்பாலும் வராது. ஆரோக்கியம் தரக்கூடிய லெமன் க்ராஸ் கிரீன் டீ கூட‌ அருந்தலாம்.
நன்மைகளைத் தேடிக்கொள்ள டிப்ஸ்:
o  என்னதான் முன்னேற்பாடுகளுடன் நாம் தயாராக இருந்தாலும் அதையும் மீறி அன்றாட வேலைகள் இருக்கதான் செய்யும். அப்படி தவிர்க்க முடியாத வேலைகளில் ஈடுபடும்போது வேலை செய்துக்கொண்டே திக்ரு, தஸ்பீஹ், ஸலவாத்களை சொல்லிக் கொண்டிருக்க‌லாம்.
o  இரவுத் தொழுகைக்கு தக்க துணையுடன் பாதுகாப்பான சூழ்நிலையில் சென்றுவர வாய்ப்புள்ள சகோதரிகள் இயன்றவரை பள்ளிக்கு சென்று ஜமாஅத்துடன் தொழுவதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.
o  சப்தங்கள் இல்லாத அமைதியான சூழல் கிடைக்கும்போதெல்லாம் திருக்குர்ஆனின் சிறிய/பெரிய சூராக்களை மனனம் செய்யலாம். அல்லது ஏற்கனவே மனனம் செய்து மறந்திருந்தால் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
o  இரவு நேரங்களில் தனிமையில் அமர்ந்து அதிகமாக துஆ செய்யலாம்.
o  அவரவர் குர்ஆன் ஓதும் வேகத்துக்கு தகுந்தமாதிரி ஒருநாளைக்கு இத்தனை ஜுஸ்உ என்று திட்டமிட்டு குறிப்பிட்ட நாட்களில் திருக்குர்ஆனை ஓதி முடித்தால் அதிகமான நாட்களுக்கு நீட்டிக்காமல், லைலத்துல் கத்ரு வரக்கூடிய‌ கடைசிப் பத்து நாட்களுக்கு முன்பே ஒருமுறையோ/இரண்டு முறைகளோ குர்ஆனை ஓதி முடித்துவிடலாம். இயன்றால் மீண்டும் கடைசிப் பத்தில் புதிதாகவும் ஓதத் துவங்கலாம்.
o  6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை நோன்பு நோற்கவும், 5 வேளைத் தொழுகை உட்பட சிறு சிறு அமல்களைச் செய்யவும் ஆர்வத்தைத் தூண்டுவதோடு, டிவி/கேம்ஸ்/இணையம் போன்றவற்றில் அவர்கள் டைம் பாஸ் பண்ணக்கூடிய மாதம் இதுவல்ல என்பதை அவர்களுக்கு புரியவைத்து, நம்முடன் சேர்ந்து அவர்களும் நன்மைகளைச் செய்யும் வகையில் அவர்களைக் கண்காணிக்கவேண்டும்.
o  வெள்ளிக் கிழமைகளில் அதிகமாக ஓதும் ஸலவாத்தினை ரமளானின் வெள்ளிக் கிழமைகளிலும் அதிகமாக்கிக் கொள்ளுங்கள்.
o  வெளியூரிலிருந்து நம்மைத் தேடி வரக்கூடிய மக்களுக்கோ, வீடு தேடிவரும் ஏழைகளுக்கோ, உறவினர்கள்/நண்பர்களுக்கோ நோன்பு திறக்கும் இஃப்தார் மற்றும் ஸஹர் உணவு ஏற்பாடு செய்து கொடுப்பது நன்மையான விஷயமே! ஆனால் சிலர் இஃப்தாருக்கென்றே பெரிய ஏற்பாடுகளைச் செய்து விருந்துக்கு மற்றவர்களை அழைப்பார்கள். அதற்காக‌ அன்றைய பொழுது முழுவதும் சமையல் அறையில் அவர்கள் செலவழித்துக் கொண்டிருப்பார்கள். இது தேவையற்ற/தவிர்ந்துக் கொள்ளவேண்டிய ஒன்று! (எல்லோரும் கூடி செய்யக்கூடிய, பொது இஃப்தார் நிகழ்ச்சிகள் என்றால் அது யாருடைய அமல்களையும் வீணாக்காது)
o  தூங்கி எழுந்தது முதல் இரவு படுக்கச் செல்லும் முன் வரை ஒவ்வொரு நிலையிலும் ஓதவேண்டிய துஆக்களை அவ்வப்போது மறக்காமல் ஓதிக் கொள்ளுங்கள்.
o  நம்மால் இயன்றவரை அதிகமாக‌ ஸதகா (தர்மம்) செய்யவேண்டும். நாம் செய்யும் தர்மம் இஸ்லாம் காட்டிய முறையில் இருக்கவேண்டும். (சிலர் ஜ‌காத்தும் ஸதகாவும் ஒன்று என தவறாக விளங்கி வைத்துள்ளனர். இரண்டுக்குமுள்ள வித்தியாசங்களை பார்க்கவும்.)
o  அக்கம் பக்கத்தில் கூடிப் பேசி நேரத்தைக் கழிப்பது, விவாதங்கள்/தர்க்கங்கள், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் பொழுதை ஓட்டுவது, அவசியத் தேவையின்றி இணையத்தில் நேரம் செலவழிப்பது போன்றவற்றைக் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். இயன்றவரை தொலைப்பேசியின் மூலமும்கூட வீணான பேச்சுக்களை பேசுவதைக் தவிர்ந்துக் கொள்ள‌வேண்டும். நோன்பின் நோக்கம் நிறைவேறும்படி நம் அமல்களை அமைத்துக் கொள்ளவேண்டும்.
o  ரமளானின் ஆரம்ப நாட்களின் இரவுகளைவிட கடைசிப் பத்து நாட்களின் இரவுகள் மிகவும் சிறப்பும், முக்கியத்துவமும் வாய்ந்ததாக இருப்பதால் இயன்றவரை இரவில் கண்விழித்து அமல்களைச் செய்ய முயற்சி செய்யவேண்டும். சில நேரங்களில் நம்மையும் மீறி தூக்கம் மேலிடும். அதுபோன்ற சமயங்களில் தையல், பின்னல் போன்ற பயனுள்ள கைவேலைப்பாடுகள் (Crafts) தெரிந்தவர்கள் அதை செய்துக் கொண்டே தூக்கத்தைக் கலைப்பதன் மூலம் தஸ்பீஹ், திக்ரு, ஸலவாத் மற்றும் கடைசிப் பத்துக்கான பிரத்யேக துஆ (“அல்லாஹும்ம இன்னக அஃபுவ்வுன், துஹிப்புல் அஃப்வ, ஃபஅஃபு அன்னீ”) போன்றவற்றை ஓதலாம்.
அல்லாஹுதஆலா நம் அனைவருக்கும் ஆரோக்கியமான உடல்நிலையுடன் ரமலான் நோன்புகளை நோற்கவும், அதிகமதிகமான நல்ல அமல்களை செய்து மறுமையில் அதன் முழு பலனை அடையவும் நல்லருள் புரிவானாக!
நன்றி “பயணிக்கும் பாதை”
6/22/2014 07:13:00 PM | 0 நல்ல கருத்துரைவழங்கியோர்: | Read More